திருச்செந்தூர் கோயில் யானை மீது தவறில்லை: திருச்சி பாகன் கருத்து!

By KU BUREAU

திருச்செந்தூரில் முருகன் கோயில் யானை தாக்கி பாகனும், அவரது உறவினரும் பலியான நிலையில் திருச்செந்தூர் கோயில் யானை மீது தவறில்லை என்று ​திருச்சியில் கோயில் யானையைப் பராமரித்துவரும் யானைப் பாகன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து நமது செய்தியாளரிடம் பேசிய அவர், “பொதுவாக நம்முடைய வீட்டில் நாம் ரிலாக்ஸாக இருந்தாலும் புதிய நபர் யாராவது வீட்டிற்கு வந்தாலும் கொஞ்சம் அலர்ட்டாக இருப்போம். அதேபோலவே யானைகள் கோயில் வளாகத்தில் பக்தர்கள் முன் நிற்கையில் சகஜமாக இருக்கும். அதன் கூடாரத்தில் இருக்கும் போது கவனமாகவும், முன்னெச்சரிக்கையுடனேயே இருக்கும். அதுவே அதன் குணம்.

திருச்செந்தூரில் கோயில் யானை தெய்வானை அதன் கூடாரத்தில் ஓய்வாக இருக்கும் போது, உதவி பாகன் உதயகுமாரின் உறவினரான சிசுபாலன் யானைக்கு பிடிக்காத ஏதோ ஒரு விஷயத்தை செய்திருக்க வேண்டும். அதனால் கோபமடைந்த யானை அவரைத் தாக்கி இருக்கலாம்.

உதவி பாகன் உதயகுமார் சிசுபாலனைக் காப்பாற்றுவதற்காக உடனடியாக யானையின் அருகே செல்லாமல் அதனை அதட்டி இருந்தாலே யானை அமைதியாகி இருக்கும். அவர் பதற்றத்தில் சிசுபாலனைக் காப்பாற்ற அருகே செல்ல, தன்னருகே வந்தது சிசுபாலன் தான் எனத் தெரியாமல் யானை அவரையும் தாக்கி இருக்கக்கூடும்.

ஏனெனில் இந்த சம்பவம் நடந்த அடுத்த சில நிமிடங்களிலேயே யானை இயல்பு நிலைக்குத் திரும்பி தன்னுடைய பாகனைத் தேடத் தொடங்கியதைக் காண முடிந்தது.

இந்த சம்பவத்தை எதிர்பாராமல் நேர்ந்த ஒரு விபத்து என்று கூறலாம். இதனை யானையின் தவறு என்று கூற முடியாது. அதேபோல, திருச்செந்தூர் உள்ளிட்ட பெரும்பாலான கோயில்களில் யானைகள் குளித்து விளையாட பிரத்தியேக தண்ணீர் தொட்டிகள், நடைபயிற்சி மேற்கொள்ள யானைகளுக்கான பிரத்தியேக நடைபாதைகள் என பல வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அதனால், கோயில் யானைகள் முன்பைவிட தற்போது மகிழ்ச்சியாகவே உள்ளன”என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE