கரூர்: ஆழ்துளை குழாயை பிடித்து விளையாடிய சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

By க.ராதாகிருஷ்ணன்

கரூர்: குளித்தலை அருகே ஆழ்துளை குழாயை பிடித்து விளையாடிய சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள நங்கவரத்தை அடுத்துள்ள தமிழ்ச் சோலையை சேர்ந்தவர் மதன்குமார். விவசாய கூலித் தொழிலாளி. இவர் மனைவி ஷீலா. இவர்கள் மகன் ரோகித் ஷர்மா (6). அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தார். இன்று (நவ.19ம் தேதி) பள்ளிக்கு செல்லாத ரோகித் ஷர்மா மதியம் தெருவில் உள்ள ஆழ்துளை குடிநீர் குழாயை பிடித்து விளையாடியுள்ளார். அப்போது, மோட்டார் இயங்கிக் கொண்டிருந்ததால் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக மின்சாரம் தாக்கி கீழே சிறுவன் மயங்கி விழுந்துள்ளார்.

அங்கிருந்த பெண்மணி இதனை கண்டு ஓடிச்சென்று உடனடியாக மோட்டாரை நிறுத்தியுள்ளார். மேலும், குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த குளித்தலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE