பெரியகுளம்: சபரிமலை சென்று ஊர் திரும்பிக் கொண்டிருந்த ஆந்திராவை சேர்ந்த பக்தர்களின் கார் பெரியகுளம் அருகே விபத்துக்கு உள்ளானது. இதில் இரண்டு சிறுவர்கள் உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சிலர் சபரிமலையில் தரிசனம் முடித்து விட்டு காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே திண்டுக்கல் புறவழிச்சாலையில் இன்று (நவ.18) சென்ற போது டயர் வெடித்து கார் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் எதிரே வந்த பிக்கப்வேன் மீது மோதி பின்பு சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டது.
ஓட்டுநர் பிரசன்குமார் ரெட்டி (35), பவன்குமார் (41), ஐசட்டி (37) மற்றும் இரண்டு சிறுவர்கள் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் இவர்களை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பெரியகுளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.