வேலூர்: வேலூர் அருகே வீட்டில் யானை தந்தம், யானை பல் பதுக்கி வைத்திருந்த புகாரில் பாஜக வேலூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் உள்ளிட்ட 9 பேரை பிடித்து வேலூர் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்த யானை தந்தம், யானை பல் ஆகியவை பறிமுதல் செய்துள்ளனர்.
வேலூரை அடுத்த மலைக்கோடி பகுதியைச் சேர்ந்தவர் சம்பத் (56). இவரது வீட்டில் யானை தந்தம் உள்ளிட்ட பொருட்கள் பதுக்கப் பட்டிருப்பதாக வேலூர் வன குற்றங்கள் தடுப்புப் பிரிவு வனச்சரகர் புருஷோத்தமனுக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், வேலூர் வனச்சரக அலுவலர்கள், காவலர்கள் அடங்கிய குழுவினர் சம்பத் வீட்டில் இன்று பகல் 2 மணியளவில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அவரது வீட்டில் இருந்து ஒரு யானை தந்தத்தின் நான்கு துண்டுகள் மற்றும் ஒரு யானை பல்லும் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, சம்பத்திடம் நடத்திய விசாரணையில் யானை தந்தம், யானை பல் கடத்தலில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
அவர் கூறிய தகவலின் அடிப்படையில், அரியூர் ஏஜி நகரைச் சேர்ந்த சரத்குமார் (32), திருவண்ணாமலை மாவட்டம், நிம்மியம்பட்டு அருகே கீழ்கோயிலூரைச் சேர்ந்த குமார் (40), தூத்துக்குடி மேல்ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த தனபால் (63), வேலூர் சத்துவாச்சாரி பெரிய தெருவைச் சேர்ந்த தரணிகுமார் (57), சின்னஅல்லாபுரம் நேதாஜி நகரைச் சேர்ந்த பழனி (68) மற்றும் அனீஸ் (52), அணைக்கட்டைச் சேர்ந்த ரவி (47), அரியூர் குப்பம் பகுதியிலுள்ள தனியார் விடுதி ஊழியர் மணிகண்டன் (36) ஆகிய 9 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
» திருப்பூரில் 'பங்குச் சந்தை' பெயரில் இளைஞரிடம் ரூ. 35 லட்சம் மோசடி - போலீஸ் விசாரணை
» இலங்கைக்கு கடத்தப்பட்ட 1,263 கிலோ பீடி இலைகள், 118 கிலோ சுருட்டு பறிமுதல் - இருவர் கைது
இவர்களுக்கு எப்படி யானை தந்தம் கிடைத்தது, எங்கிருந்து யார் மூலம் கிடைத்தது என்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்களை விசாரித்து வருகின்றனர். சிக்கிய 9 பேரில் சரத்குமார் வேலூர் மாவட்ட பாஜக இளைஞரணி செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.