பேக்கரி ஊழியர் மீது தாக்குதல்: திருப்பூரில் போதை கும்பலைச் சேர்ந்த 4 பேர் கைது

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: கடைக்காரர் நள்ளிரவு நேரத்தில் தேநீர் இல்லை என்று சொன்னதால் ஆத்திரம் அடைந்த போதை கும்பல், பேக்கரி ஊழியர் மீது கடும் தாக்குதல் நடத்தினர். அதில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர் வீரபாண்டியில் பொன்ராஜ் என்பவருக்கு சொந்தமான பேக்கரி உள்ளது. நேற்று நள்ளிரவில் பொன்ராஜூக்கு சொந்தமான பேக்கரிக்கு மது போதையில் சென்ற 5 பேர் கடையில் இருந்த இனிப்பு மற்றும் கார வகைகளை எடுத்து சாப்பிட்டுள்ளனர். தொடர்ந்து கடை ஊழியரிடம் தேநீர் கேட்டுள்ளனர். ஆனால் இரவு நேரம் அதிகமாகிவிட்டதால், தேநீர் இல்லை என கூறியுள்ளனர். இதனால் மது போதையில் இருந்த இளைஞர்களுக்கும், கடை ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது.

மேலும், சாப்பிட்ட தின்பண்டங்களுக்கு பணம் கொடுத்து செல்லுமாறு ஊழியர்கள் கூறியுள்ளனர். தேநீர் இல்லை என்று சொல்லியதால் எதற்கு பணம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, கடை ஊழியர்கள் மீது சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்டனர். கீழே தள்ளிவிட்டு காலால் எட்டி உதைத்தும் தாக்கியுள்ளனர். அப்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், சம்பவம் நடந்த பகுதிக்கு வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையில் இளைஞர்கள் போதையில் இருந்ததால், அவர்கள் வந்த இரண்டு இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து இளைஞர்கள் விசாரணைக்காக அழைத்து சென்றனர். ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட காட்சிகள் கடையில் இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த நிலையில் அதனை ஆதாரமாகக் கொண்டு போலீஸார் விசாரித்தனர். அதனடிப் படையில், சிவா (36), கனகராஜ் (38), கார்த்திக் (29), மணிகண்டன் (34) ஆகியோரை கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE