திருப்பூர்: பங்குசந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி, ரூ.35 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
திருப்பூரை சேர்ந்த 36 வயது இளைஞருக்கு, கடந்த கடந்த பிப்ரவரி மாதம் இன்ஸ்டாகிராம் மூலமாக ஒரு விளம்பரம் வந்துள்ளது. அதில் பங்குசந்தையில் குறைந்த முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது. இதனை நம்பிய அந்த இளைஞர் அந்த லிங்கில் சென்று பார்க்கவே, அவருக்கு வாட்ஸ் அப் அழைப்பில் தொடர்பு கொண்டுள்ளனர்.
தொடர்ந்து அந்த நபர்கள் சொல்லிய வங்கிக் கணக்குக்கு இளைஞர், ரூ.21 லட்சம் பரிமாற்றம் செய்தார். இதில் அவருக்கு ரூ.1 லட்சம் லாபம் கிடைத்தது. தொடர்ந்து பங்குசந்தையில் லாபம் பெற பல்வேறு தவணைகளில் மேலும் ரூ.14 லட்சத்தை அந்த வங்கி கணக்குக்கு அனுப்பினார். அவர் மொத்தமாக செலுத்திய தொகை ரூ.35 லட்சம் ஆகும்.
இந்நிலையில் அந்த தனியார் பங்குசந்தை நிறுவனத்தினர், இளைஞரின் மடிக்கணினியில் உள்ள செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் பங்குசந்தையை கண்காணிக்க அறிவுறுத்தி உள்ளனர். 2 மாதங்களுக்கு பிறகு, அந்த செயலி காலாவதியானது.
» திருநங்கைக்கு பாலியல் தொல்லை அளித்த போலீஸ்காரர் பணிநீக்கம் @ தஞ்சை
» பள்ளிக்கு தாமதமாக வந்த 18 மாணவிகளின் தலைமுடியை வெட்டிய ஆசிரியர்: ஆந்திராவில் அதிர்ச்சி
மேலும் இளைஞர் முதலீடு செய்த ரூ. 35 லட்சத்தையும் எடுக்க முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீஸாருக்கு புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.