விழுப்புரத்தில் செப்டம்பர் வரை 117 போக்சோ வழக்குகள் பதிவு - காரணம் என்ன?

By எஸ்.நீலவண்ணன்

2023-ம் ஆண்டு ஜனவரி நிலவரப்படி 2.43 லட்சம் போக்சோ வழக்குகள் நாடு முழுவதும் நிலுவையில் இருப்பதாக இந்தியக் குழந்தைகள் பாதுகாப்பு நிதியம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு தொடரப்பட்ட பொதுநல வழக்கின் அடிப்படையில், சிறார் மீதான பாலியல் குற்றங்களை விசாரிக்க விரைவு சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்தது.

ஒரு மாவட்டத்தில் 100 வழக்குகளுக்கு மேல் இருந்தால், ஒரு போக்சோ நீதிமன்றத்தையும் 300 வழக்குகளுக்கு மேல் இருந்தால் இரண்டு போக்சோ நீதிமன்றங்களையும் அமைக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், மாநில அரசுகள் சிறப்பு நீதிமன்றங்களைப் போதிய அளவு அமைக்கவில்லை.

இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், “2021-ம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் 4,020 வழக்குகள் தொடரப்பட்டன. ஏற்கனவே நிலுவையில் இருந்த வழக்குகளையும் சேர்த்து அந்த ஆண்டில் போக்சோ சிறப்பு நீதிமன்றங்களில் விசாரணைக்கு வந்த வழக்குகளின் எண்ணிக்கை 9,643 ஆகும். இவற்றில் வெறும் 955 வழக்குகளில் மட்டுமே தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. அதாவது மொத்த வழக்குகளில், 9.90 சதவீத வழக்குகளில் மட்டுமே தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

அதிலும் கூட 202 வழக்குகளில், அதாவது 21.10 சதவீத வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 753 (78.90 சதவீதம்) வழக்குகளில் எதிரிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த அளவுக்கு குற்றவாளிகள் தப்புவதை நியாயப்படுத்த முடியாது. 2022-ம் ஆண்டிலும் அதே நிலை தான் தொடர்ந்திருக்கிறது. அந்த ஆண்டில் ஒட்டுமொத்தமாக விசாரணைக்கு வந்த 13,399 வழக்குகளில் வெறும் 15.17 சதவீதம், அதாவது 2033 வழக்குகளில் மட்டுமே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிலும் கூட 524 வழக்குகளில் (25.77 சதவீதம்) மட்டும் தான் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 74.22 சதவீத வழக்குகளில் எதிரிகள் தப்பியுள்ளனர்.

போக்சோ சட்டத்தின்படி தொடரப்படும் வழக்குகளில் நான்கில் மூன்று பங்கு வழக்குகளில் குற்றவாளிகள் தப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது. புலன் விசாரணைகளில் நடக்கும் குளறுபடிகளும், நீதிமன்ற விசாரணையின் தாமதமும்தான் இதற்கு காரணம்!" என்று குற்றம்சாட்டியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு 91 வழக்குகளும், 2022-ம் ஆண்டு 59 வழக்குகளும், கடந்த 2023-ம் ஆண்டு 44 வழக்குகளும் என படிப்படியாக குறைந்த நிலையில், நடப்பாண்டு செப்டம்பர் வரை 117 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளன.

வழக்குகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவது குறித்து காவல்துறையினரிடம் கேட்டபோது, “கடந்த ஆண்டுகளில் வழக்கு பதிவு எண்ணிக்கை குறைவாக இருப்பதால் குற்றமே நடக்கவில்லை என்று அர்த்தமல்ல. பாதிக்கப்பட்டவர்கள் முன்னைக் காட்டிலும் தற்போது புகார் கொடுக்க முன் வருகிறார்கள் என்பதையே இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

வெகுசில குடும்பங்களில் பொருள் தேடுவதையே முக்கிய பணியாக கொண்டுள்ளனர். வளர்இளம் பருவத்தினரை அக்கறையுடன், சரிவர கண்காணிப்பதில்லை. சிறார் மீதான பாலியல் அத்துமீறல்களில் பல ஆழமான சமூக, உளவியல் காரணங்கள் இருந்தாலும் இதுவும் முக்கியமான விஷயமாக இருக்கிறது” என்று தெரிவிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE