தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே திருநங்கைக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், போலீஸ்காரரை பணிநீக்கம் செய்து எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர் அருகே பள்ளியக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த வினோத்(38), அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார்.
இவர், கடந்த ஆண்டு திருநங்கை ஒருவரின் வீட்டுக்குள் இரவு நேரத்தில் அத்துமீறி நுழைந்து, அவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், அய்யம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் வினோத் மீது துறைரீதியான விசாரணையும் நடைபெற்று வந்தது.
இதற்கிடையே, 2023-ம் ஆண்டு வினோத் திருவோணம் காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனாலும், அவர் முறையாக பணிக்கு செல்லாமல் அவ்வப்போது விடுப்பு எடுத்து வந்துள்ளார். இந்நிலையில், திருநங்கைக்கு வினோத் பாலியல் தொல்லை அளித்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவரை பணிநீக்கம் செய்து தஞ்சாவூர் எஸ்.பி. ஆசிஷ் ராவத் நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.