பாட்னா: பிஹார் மாநிலம் அர்வால் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வீட்டுப் பாடத்தை முடிக்காத 12 வயது சிறுவனை ஆசிரியர் அடித்ததால் கண்ணில் பலத்த காயம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவனின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், உமைராபாத் பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் ஆசிரியர் மற்றும் நிர்வாகம் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 5 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் அமித் ராஜ், தற்போது பாட்னாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட அமித் ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நவம்பர் 13-ம் தேதி வீட்டுப்பாடம் செய்யாததால் ஆசிரியர் என்னை கட்டையால் அடித்ததில் எனது இடது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து எனது பெற்றோரிடம் கூறினேன். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்” என்று கூறினார். காயம் பெரிய அளவில் இருந்ததால், அச்சிறுவன் சிறப்பு சிகிச்சைக்காக பாட்னா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். கண்ணில் ஏற்பட்ட காயம் தீவிரமானது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக சிறுவனின் குடும்ப உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து பேசிய அர்வால் எஸ்பி ராஜேந்திர குமார் பீல்சாய்ட், "அமித்தின் குடும்பத்தினர் ஞாயிற்றுக்கிழமை காவல்துறையில் புகார் அளித்தனர். மாணவருக்கு காயம் ஏற்படுத்தியதாக ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது" என்றார்
» மக்களுக்கு நல்ல குடிநீர் தர ரூ.500 கோடி வரை செலவு செய்ய திட்டம்: முதல்வர் ரங்கசாமி தகவல்
» இந்திய விமானப் போக்குவரத்தில் மாபெரும் சாதனை: ஒரே நாளில் 5 லட்சம் பயணிகள் உள்நாட்டில் பயணம்!