கேரளா: திருச்சூரில் ஆம்புலன்ஸ் வாகனத்தை தடுத்த நபரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டு ரூ.2.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த நவம்பர் 7ஆம் தேதி பொன்னானியில் இருந்து திருச்சூர் மருத்துவக் கல்லூரிக்கு சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்தை சாலக்குடியில் ஒரு காரில் சென்ற நபர் வேண்டுமென்றே வழிமறித்துள்ளார்.
ஆம்புலன்ஸில் சென்ற மருத்துவ பணியாளர்களால் எடுக்கப்பட்டு பகிரப்பட்ட வீடியோவில், மாருதி சுஸுகி சியாஸ் கார் ஒன்று ஆம்புலன்ஸை சாலையில் வேண்டுமென்றே இரண்டு நிமிடங்களுக்கு மேல் தடுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விடாபிடியாக சத்தம் எழுப்பியபோதும், சைரன் சத்தம் கேட்டபோதும், கார் ஓட்டுநர் திரும்பத் திரும்ப ஆம்புலன்ஸ் வாகனத்தை வழிமறித்தார்.
வாகனத்தின் பதிவு எண்ணை பயன்படுத்தி ஓட்டுநரை அதிகாரிகள் அடையாளம் கண்டு சட்ட நடவடிக்கையைத் தொடங்கினர். அவசரகால வாகனத்திற்கு வழிவிட தவறியது, அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியின் செயல்பாடுகளைத் தடுத்தது, மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழை (PUCC) எடுத்துச் செல்லாதது உள்ளிட்ட மோட்டார் வாகனச் சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் கார் ஓட்டுநர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதன்படி அந்த நபரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டு,ரூ.2.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
» 3 மணி நேரம் நிற்க வைத்து ராகிங் கொடுமை; மருத்துவ மாணவர் உயிரிழப்பு - குஜராத்தில் அதிர்ச்சி
இந்த அபராதத் தொகையில் பல மீறல்களுக்கான அபராதங்களும் அடங்கும். அவசரகால சேவைகளைத் தடுத்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகனச் சட்டத்தின் 194இ பிரிவின்படி, ஆம்புலன்ஸுக்கு வழிவிட மறுத்தால், ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை, ரூ. 10,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
ஆம்புலன்ஸ்கள் விரைவாக செல்வதை உறுதி செய்வது சட்ட மற்றும் தார்மீகப் பொறுப்பு என்று கேரள மோட்டார் வாகனத் துறை (எம்விடி) மீண்டும் வலியுறுத்தியுள்ளது.