3 மணி நேரம் நிற்க வைத்து ராகிங் கொடுமை; மருத்துவ மாணவர் உயிரிழப்பு - குஜராத்தில் அதிர்ச்சி

By KU BUREAU

அகமதாபாத்: குஜராத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர், சீனியர் மாணவர்களின் ராகிங் கொடுமையால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

தர்பூர் படானில் உள்ள ஜிஎம்இஆர்எஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனில் மெத்தானியா முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று இரவு விடுதியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் ‘அறிமுகம்’க்காக அவரை மூன்று மணிநேரம் நிற்க வைத்து ராகிங் செய்துள்ளனர். "இண்ட்ரோ" என்பது விடுதிகளில் ராகிங்காக அடிக்கடி பயன்படுத்தப்படும் வார்த்தையாகும்.

மூன்று மணி நேரம் நின்று கொண்டிருந்த 18 வயதான அனில் சுருண்டு விழுந்து மயக்கமடைந்துள்ளார். இதனையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அப்போது அவர், சீனியர்கள் தன்னை மூன்று மணி நேரம் நிற்க வைத்து ராகிங் செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் பதிவு செய்தார். இதன்பின்னர் உடல்நிலை மோசமடைந்த அனில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய அனிலின் உறவினர் தர்மேந்திரா,” அனிலின் குடும்பம் குஜராத்தின் சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ளது. இது படானில் உள்ள கல்லூரியில் இருந்து 150 கி.மீ. தொலைவில் உள்ளது. நேற்று எங்களுக்கு கல்லூரியில் இருந்து அழைப்பு வந்தது, அனில் சுருண்டு விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று சொன்னார்கள். நாங்கள் இங்கு வந்தபோது, ​​​​மூன்றாம் ஆண்டு மாணவர்கள் அவரை ராகிங் செய்ததால் இறந்தது தெரிந்தது. எங்களுக்கு நீதி வேண்டும்" என்று அவர் கூறினார்.

மருத்துவக் கல்லூரியின் டீன் ஹர்திக் ஷா கூறுகையில், " இதுகுறித்து நாங்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளோம். காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முயற்சிப்போம்." என்றார்

இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி கே.கே.பாண்டியா கூறுகையில், “மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில், விபத்து மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, சம்பவம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க மருத்துவ அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம். ராகிங் குறித்தும் கல்லூரியில் இருந்து விரிவான தகவல்களை கேட்டுள்ளோம். முதல்கட்டமாக எஃப்ஐஆரில் 15 சீனியர் மாணவர்களின் பெயர்கள் சேர்த்துள்ளோம்” என்றார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE