உத்தமபாளையத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை

By என்.கணேஷ்ராஜ்

உத்தமபாளையம்: உத்தமபாளையத்தில் இன்று காலையில் இளைஞர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் இக்கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் - கம்பம் புறவழிச்சாலையில் இருந்து ஊத்துக்காடுக்குச் செல்லும் பாதை அமைந்துள்ளது. இங்குள்ள லாரி ஒர்க்ஷாப்பில் இன்று (சனி) காலை இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து உத்தமபாளையம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் செங்கோட்டுவேலவன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

மோப்பநாய் பைரவ் வரவழைக்கப்பட்டு அப்பகுதியைச் சுற்றி வந்தது. பின்பு ஊத்துக்காட்டில் இருந்து கம்பம் செல்லும் சாலையில் ஓடி அங்கேயே நின்று விட்டது. விசாரணையில் கொலை செய்யப்பட்டது கம்பம் வடக்குப்பட்டி பாரதியார் நகரைச் சேர்ந்த முத்துக்குமார்(35) என்பது தெரிய வந்தது.

இது தொடர்பாக கம்பம்மெட்டு காலனியைச் சேர்ந்த சதாம்உசேன் என்பவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் இக்கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் முதற்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. உத்தமபாளையம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE