திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் உள்ள 7 ஆசிரியர்கள், மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக உதவி காவல் கண்காணிப்பாளர் வி.சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ‘நல்ல தொடுதல், கெட்ட தொடுதல்’ குறித்த விழிப்புணர்வு சிறப்பு முகாம் கடந்தவாரம் நடைபெற்றது.
அப்போது, மவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை அலுவலரிடம், பள்ளியில் கடந்த 2 ஆண்டுகளாக தங்களுக்கு ஆசிரியர்களால் ஏற்பட்ட பாலியல் சீண்டல் குறித்து தெரிவித்துள்ளனர். பள்ளியில் மட்டுமின்றி வெளியிடங்களுக்கு அழைத்து செல்லும்போது பாலியல் சீண்டல் இருந்ததாகவும், இதில் 7 ஆசிரியர்களின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளனர்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட தாக கூறப்படும் 10-க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் இருந்து விவரங்களை பெற்று, திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வி அறிக்கை சமர்ப்பித்தார். இதனடிப்படையில் போக்சோ உட்பட 3 பிரிவுகளில் அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் வி.சதீஷ்குமார் நேற்று கூறும்போது, “மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு மூலம் நடத்தப்பட்ட விழிப்புணர்வு சிறப்பு முகாமில், தவறான தொடுதல் குறித்து 10-க்கும் மேற்பட்ட மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
» 'வாழு, வாழ விடு’ தனுஷ் வீடியோவைப் பகிர்ந்து விக்னேஷ் சிவன் பதிலடி!
» சென்னை - கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் அடிக்கடி தாமதமாகும் ரயில்கள்!
இது தொடர்பாக அறிக்கை பெறப்பட்ட கடந்த 11-ம் தேதியே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர்கள் லட்சுமி, கோமள வள்ளி ஆகியோர் தலைமையில் கடந்த 4 நாட்களாக, மாணவிகள் மற்றும் அவர்களால் கூறப்பட்ட ஆசிரியர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
வழக்குப்பதிவு செய்வதில் தாமதம், விசாரணை நடைபெறவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தவறு. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்வுகளையும் மாணவிகள் சுட்டிக்காட்டியதாக கூறப்பட்டுள்ளது. விசாரணையில், இதுவரை தவறுகள் கண்டறியப் படவில்லை. விசாரணை நடைபெற்று வருவதால், நீங்கள் குறிப்பிடு வதுபோல் 7 ஆசிரியர்கள் மீது வழக்கா? என சொல்ல முடியாது. விசாரணை அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.