குன்றத்தூர் | எலி மருந்தால் 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம்: வீட்டில் தடயவியல் துறையினர் ஆய்வு

By KU BUREAU

குன்றத்தூர்: குன்றத்தூர் அடுத்த மணஞ்சேரி, தேவேந்திரன் நகர் பகுதியைச் சேர்ந்த வங்கி அதிகாரி கிரிதரன் (34). இவர் மனைவி பவித்ரா (30), மகள் வைஷாலினி(6), மகன் சாய்சுந்தரேசன்(1) ஆகியோருடன் வசித்து வந்தார். இவர்களின் வீட்டில் எலி தொந்தரவு அதிகமாக இருந்ததால் கிரிதரன் தி.நகரில் உள்ள பூச்சியியல் கட்டுப்பாட்டு நிறுவனத்தை அணுகினார்.

அந்த நிறுவனத்தை சேர்ந்த 2 பேர் கடந்த 13-ம் தேதி வீட்டுக்கு வந்து ஆங்காங்கே எலி மருந்தை வைத்தனர். அன்று இரவு அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது மருந்தின் நெடி காரணமாக குழந்தைகள் வைஷாலினி, சாய் சுந்தேரேசன் இருவரும் உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் கிரிதரன் மற்றும் மனைவி பவித்ரா ஆகியோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து, குன்றத்தூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அஜாக்கிரதையாக செயல்பட்டதாக தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் பிரேம் குமார், பணியாளர்கள் தினகரன், சங்கரதாஸ் ஆகிய 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து பணியாளர்கள் இருவரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள அந்நிறுவன உரிமையாளரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், சம்பவம் நடந்த வீட்டில் தடயவியல் துறை உதவி இயக்குநர் ஜெயந்தி தனது குழுவினருடன் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனிடையே, மருத்துவமனையில் பெற்றோர் தீவிர சிகிச்சை பெற்று வருவதால், 2 குழந்தைகளின் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பெற்றோருக்கு முறையாக தகவல் தெரிவித்து, அனுமதி கையெழுத்து பெற்ற பிறகே பிரேதப் பரிசோதனை செய்யப்படும் என போலீஸார் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE