திருச்சி: திருச்சி மத்திய சிறை கைதி ஒருவர் நெஞ்சுவலி ஏற்பட்டு இன்று உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சீராத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் மா.கருணா என்கிற கருணாமூர்த்தி (35). இவர் கோவை மாவட்டம் சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, கடந்த 2022ம் ஆண்டு முதல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் மீது திருச்சி மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் சில வழக்குகள் பதிவாகியிருந்ததாலும், சிறையில் இருந்தவாறே ஐடிஐ படிக்க விரும்பியதாலும், இவரை கோவையிலிருந்து திருச்சி மத்திய சிறைக்கு மாறுதல் செய்துள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை (நவம்பர் 15ம் தேதி) அவர் சிறை வளாகத்தில் டீ குடித்துக் கொண்டிருந்தபோது, அவருக்கு திடீரென நெஞ்சு வலிப்பதாகவும், எரிச்சலாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சிறையில் உள்ள மருத்துவமனையில் மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து திருச்சி கே.கே.நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்த சம்பவத்தோடு சேர்த்து கடந்த 10 நாட்களுக்குள் திருச்சி மத்திய சிறையில் 3 கைதிகள் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
» ஜெனரேட்டரில் பெட்ரோல் ஊற்றும்போது தீ விபத்து - கோவையில் பெண் உயிரிழப்பு
» ராமேசுவரம்: கொடிக் கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து சரக்கு வாகன ஓட்டுநர் உயிரிழப்பு
திருவெறும்பூர் ரவுடி கொலை வழக்கில் கைதாகி விசாரணைக் கைதியாக சிறையிலிருந்த கணேசமூர்த்தி என்பவர் கடந்த 7-ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். திருச்சி அரசு மருத்துவமனையில் காசநோய் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த திருச்சி சிறை தண்டனைக் கைதி முத்தையன் (30) என்பவர் கடந்த 10-ம் தேதி உயிரிழந்தார். இன்று கருணாமூர்த்தி உயிரிழந்துள்ளார்.