ஜெனரேட்டரில் பெட்ரோல் ஊற்றும்போது தீ விபத்து - கோவையில் பெண் உயிரிழப்பு

By டி.ஜி.ரகுபதி

கோவை: கோவை கணபதியில், சடலம் வைக்கப்பட்டிருந்த பெட்டிக்கு மின் இணைப்பு வழங்க, ஜெனரேட்டரில் பெட்ரோல் ஊற்றும் போது, தீ விபத்து ஏற்பட்டு பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கோவை கணபதி கே.ஆர்.ஜி. நகரை சேர்ந்தவர் ராமலட்சுமி (85). இவர், வயது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு நேற்று (நவ.14) மாலையில் உயிரிழந்தார். இதையடுத்து ராமலட்சுமியின் மகன் முருக சுப்பிரமணியத்தின் வீட்டில் அவருடைய உடல் குளிர்பதன பெட்டியில் (பிரீசர் பாக்ஸ்) வைக்கப்பட்டிருந்தது. உறவினர்கள் பலர் வந்து துக்கம் விசாரித்தனர். வீட்டின் முன்பக்க அறையில் வைத்திருந்த ராமலட்சுமியின் உடலை சுற்றிலும் உறவினர்கள் அமர்ந்திருந்தனர்.

இந்நிலையில், இன்று (நவ.15) கணபதி பகுதியில் மின் தடை ஏற்பட்டது. குளிர்பதன பெட்டி செயல்பட மின்சாரம் வேண்டும் என்பதால் ஜெனரேட்டர் வைத்து அதற்கு மின்சாரம் கொடுக்கப்பட்டது. அதில் எரிபொருள் தீர்ந்ததால் கணபதியைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் பெட்ரோல் வாங்கி வந்து ஜெனரேட்டரில் ஊற்றிக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென்று பெட்ரோல் கீழே சிந்தியது. அதன் அருகே சிறிய விளக்கு எரிந்து கொண்டு இருந்ததால், அதில் உள்ள தீ, கீழே சிந்திய பெட்ரோலில் பட்டு தீப்பிடித்துள்ளது. இதன் காரணமாக அந்த அறை முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

ராமலட்சுமியின் உடலருகே இருந்த முருக சுப்பிரமணியத்தின் மனைவி பத்மாவதி (53), ராமலட்சுமியின் மகள் பானுமதி (55), மகன் ராஜேஸ்வரன் (50) மற்றும் ஸ்ரீராம் ஆகியோர் மீது தீப்பிடித்தது. இதனால் அலறித்துடித்த அவர்கள் அங்குமிங்கும் ஓடினார்கள். பின்னர் 4 பேரும் ஒரு அறையில் சிக்கிக்கொண்டனர். அங்கிருந்தவர்கள் அந்த அறையின் பின்பக்க கதவை உடைத்து, 4 பேரையும் மீட்டனர்.

உடல் கருகிய நிலையில் இருந்த அவர்களை 108 ஆம்புலன்சில் ஏற்றி அவர்களை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் பத்மாவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உடல் கருகிய நிலையில் பலத்த காயத்துடன் இருக்கும் பானுமதி, ராஜேஸ்வரன், ஸ்ரீராம் ஆகியோருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இச்சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE