பெண் காவலர் மீது தாக்குதல்: டாஸ்மாக் ஊழியர் கைது

By KU BUREAU

சென்னை: கோடம்பாக்கம் போக்குவரத்து காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணி செய்து வருபவர் சகுந்தலா (34). இவர் வேளச்சேரியில் குடும்பத்துடன் வசிக்கிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் (13-ம் தேதி) மாலை 5 மணியளவில் அவர் கோடம்பாக்கம் ஆற்காடு சாலை, லிபர்ட்டி பாயிண்ட் அருகே போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, அவரிடம் அதே பகுதியில் பூக்கடை நடத்தி வரும் பெண்ணின், சிறிய வயது மகள் ஒருவர் வந்து, ‘மதுபோதையில் ஒருவர் என்னிடம் ஆபாசமாக பேசி தவறாக நடக்க முயற்சிக்கிறார்’ வந்து கண்டியுங்கள்’ என கூறியுள்ளார். இதையடுத்து, காவலர் சகுந்தலா, சம்பந்தப்பட்ட போதை ஆசாமியிடம் சென்று அவரை கண்டித்துள்ளார். இதனால், கோபம் அடைந்த போதை ஆசாமி பெண் காவலரையும் தரக்குறைவாக பேசியதோடு, அவரை சரமாரியாக தாக்கி உள்ளார். இதைக் கண்டு அந்த பகுதியில் இருந்த பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தாக்குதல் நடத்திய போதை ஆசாமியை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர்.

பின்னர், அவரை கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் பெண் காவலரை தாக்கியது கோடம்பாக்கம் மூப்பன் மெஸ்ட்ரி 2-வது தெருவைச் சேர்ந்த மோகன்ராஜ் (48) என்பது தெரியவந்தது. டாஸ்மாக் எலைட் மதுக்கடையில் விற்பனையாளராக பணி செய்து வரும் அவரை போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE