தூத்துக்குடி: உடன்குடியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் உடற்கல்வி ஆசிரியர் சிறையில் அடைக்கப்பட்டார். பள்ளி முதல்வர், செயலாளருக்கு தூத்துக்குடி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. உடன்குடியில் செயல்பட்டு வரும் சல்மா மெட்ரிக் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக அதே பகுதியே சேர்ந்த பொன்சிங் (42) என்பவர் பணியாற்றி வந்தார்.
இவர் கடந்த மாதம் 22-ம் தேதி பள்ளி மாணவிகள் 5 பேரை மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிக்காக தூத்துக்குடிக்கு அழைத்து வந்துள்ளார். இங்கு தங்கியிருந்த அறையில் மாணவிகளுக்கு மது வாங்கி கொடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் கூறியுள்ளார்.
பெற்றோர்கள் இது குறித்து பள்ளியில் முறையிட்டுள்ளனர். ஆனால் பள்ளி நிர்வாகம் முறையாக பதில் அளிக்கவில்லை. இதனால், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து, கோவையில் பதுங்கியிருந்த பொன்சிங் கைது செய்யப்பட்டார். இச்சம்பவத்தை மறைத்ததாக பள்ளி முதல்வர் சார்லஸ் ஸ்வீட்லின் மற்றும் செயலாளர் செய்யது அகமது ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.
இவர்கள் இருவரும் தங்களுக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியதை தொடர்ந்து, இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங், தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி வி.சுரேஷ் உத்தரவிட்டதை தொடர்ந்து, பேரூரணி சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
» சுவையான உணவு தயாரிக்க ஆட்டுக்கல், அம்மிக்கல் - பழமைக்கு திரும்பும் மக்களால் வரவேற்பு!
» சபரிமலை பக்தர்களுக்காக நவ.19 முதல் சேலம், ஈரோடு வழியாக வாராந்திர சிறப்பு ரயில்!
மேலும், பள்ளி முதல்வர் சார்லஸ் ஸ்வீட்லின் மற்றும் செயலாளர் செய்யது அகமது ஆகியோர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு தொடர்பாக, போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ் நேற்று அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். தொடர்ந்து இருவருக்கும் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
இதற்கிடையே பள்ளி மாணவிகளை தூத்துக்குடியில் தங்க வைத்திருந்த, தூத்துக்குடி வஉசி மார்க்கெட் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தினர். விடுதியில் பணியாற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்திய போலீஸார், அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி பதிவுகளை விசாரணைக்காக எடுத்துச் சென்றுள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.