கோவை: கோவை அருகே ரூ.54 லட்சம் பணம் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில் இரண்டு பேரை போலீஸார் கைது செய்தனர்.
கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம் சித்தூரைச் சேர்ந்த கிருஷ்ணனின் மகன் செல்வகுமார் (45). இவர், கோவை பெரியகடைவீதியில் உள்ள தங்க நகை விற்பனைக் கடையில் பொற்கொல்லராக பணியாற்றி வருகிறார். இவர், சொந்த ஊரில் இருந்து கோவைக்கு வேலைக்காக அடிக்கடி இருசக்கர வாகனத்தில் வந்து செல்வார். அவ்வப்போது, பாலக்காடு மாவட்டத்தில் உள்ள கடைகளில் இருந்து தங்கத்தை வாங்கிக் கொண்டு கோவையில் உள்ள கடைகளுக்கு விற்பனைக்காக கொடுத்து வந்தார்.
இந்நிலையில், பெரியகடைவீதியில் உள்ள ஒரு கடைக்கு செல்வகுமார் வழக்கம் போல் தங்கம் கொடுத்துள்ளார். பின்பு, அதற்கான தொகை ரூ.54 லட்சத்தை வாங்கினார். பின்னர், செல்வகுமார், க.க.சாவடியைச் சேர்ந்த நண்பர் சுரேஷ் (45) என்பவருடன் கடந்த 8-ம் தேதி இருசக்கர வாகனத்தில் பாலக்காடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
எட்டிமடையில் இருந்து வேலந்தாவளம் செல்லும் சாலையில் இவர்கள் சென்ற போது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள், அவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தினர். அந்நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி, செல்வகுமார் - சுரேஷிடம் இருந்த ரூ.54 லட்சம் பணத்தை பறித்துச் சென்றனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் க.க.சாவடி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.
» புதுச்சேரி: ஜாமீன் கிடைக்காமல் நீதிமன்றத்திலில் இருந்து தப்பிய ரவுடி கைது
» சர்வதேச பங்கு வர்த்தகம் பெயரில் ரூ.1 கோடி மோசடி - திருச்சி கும்பல் 6 பேர் கைது @ மதுரை
விசாரணையில், மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சுமித் நாகேஷ் சலுங்கே (25), அவரது நண்பர் சனீஸ் கோவிந்தன் (35) ஆகியோருக்கு இந்த வழிப்பறியில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இவர்கள் இருவரும் கேரளா மாநிலம் திருச்சூரில் உள்ள ஒரு தங்க நகைக்கடையில் பணியாற்றி வந்ததும், செல்வகுமார் பணத்துடன் வருவதை அறிந்து திட்டமிட்டு வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் க.க.சாவடி போலீஸார் புதன்கிழமை (நவ.13) கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.41 லட்சம் பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.