ஜாமீன் மறுப்பால் நீதிமன்றத்தில் இருந்து ரவுடி தப்பியோட்டம் - புதுச்சேரியில் பரபரப்பு

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: எம்எல்ஏவுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் ஜாமீன் மறுக்கப்பட்டதால், நீதிமன்றத்தில் இருந்து ரவுடி தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி ஜிப்மர் எதிரே உள்ள நகராட்சிக்கு சொந்தமான கடைகளை அரசியல் ஆதரவு பெற்ற ரவுடி ராமு என்பவர் ஆக்கிரமித்துள்ளார். இதை அங்கிருந்த வியாபாரிகள் பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏவிடம் புகாராக கூறியுள்ளனர். அதனையடுத்து, ஆக்கிரமிப்பு விவகாரத்தில், நகராட்சி ஆணையரிடம் புகார் தெரிவித்த உழவர்கரை தொகுதி எம்எல்ஏ சிவசங்கரனுக்கு ரவுடி ராமு, எம்எல்ஏ அலுவலகத்திற்கு நேரில் வந்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, எம்எல்ஏ சிவசங்கரன் கொடுத்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து இரண்டு தனிப்படை அமைத்து ரவுடி ராமுவை தீவிரமாக தேடி வந்தனர். மேலும், போலீஸார் நடவடிக்கை எடுக்கக்கோரி வியாபாரிகள் டூவீலரில் ஊர்வலமாக வந்து ஆளுநர், முதல்வரிடம் மனு அளித்தனர்.

இந்த நிலையில் புதுச்சேரி நீதிமன்றத்தில் ரவுடி ராமு இன்று இவ்வழக்கில் சரணடைந்து ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதனை விசாரித்த நீதிபதி ரமேஷ், மனுதாரர் சம்பந்தப்பட்டுள்ளது ஜாமீன் தர இயலாத வழக்கு என்பதை குறிப்பிட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையடுத்து, நீதிமன்றத்தில் இருந்து ரவுடி ராமு தப்பியோடியுள்ளார். அவரை, ரெட்டியார்பாளையம் போலீஸார் மற்றும் தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE