ஆடுதுறை சித்ரா சிட்பண்ட் மோசடி வழக்கு: 9 பீரோக்களை கைப்பற்றிய போலீஸார்

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: ஆடுதுறை சித்ரா சிட்பண்ட் மோசடி வழக்கு தொடர்பாக 9 பீரோக்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைப்பற்றினர்.

திருவிடைமருதூர் வட்டம், திருமங்கலக்குடியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர், ஆடுதுறையில் சித்ரா சிட்பண்ட் என்ற பெயரில் ஏலச்சீட்டு மற்றும் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இதில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் பல்வேறு ஊர்களிலிருந்து சீட்டு மற்றும் டெபாசிட் என பணம் செலுத்தி இருந்தனர். இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு திடீரென நிதி நிறுவனத்தை பூட்டிவிட்டு ராதாகிருஷ்ணன் அவரது குடும்பத்தினர் உட்பட அனைவரும் தலைமறைவாகினர். இந்த நிதி நிறுவனத்தின் மூலம் சுமார் ரூ.300 கோடிக்கும் அதிகமாக பணத்தை மோசடி செய்து அந்தப் பணத்தைக் கொண்டு, ராதாகிருஷ்ணன், தனது மனைவி மற்றும் நிறுவனத்தில் பணி செய்த ஊழியர்களின் பெயர்களில் சொத்துகளை வாங்கினார்.

இது தொடர்பாகப் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த 2017-ம் ஆண்டு, தஞ்சாவூர் பொருளாதார குற்றப்பிரிவிலும் திருவிடைமருதூர், திருநீலக்குடி ஆகிய காவல் நிலையங்களிலும் நூற்றுக்கும் அதிகமான புகார்களை அளித்தனர். இதையடுத்து, மோசடி செய்த தொகை அதிகமாக இருந்ததால், இந்த வழக்கு, திருச்சி பொருளாதார குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இதற்கிடையில் ராதாகிருஷ்ணன் பாதிக்கப்பட்ட சிலரிடம், ''இன்னும் சில மாதங்களில் உங்களுக்குப் பணத்தைத் திருப்பித் தந்துவிடுகிறேன். ஆகவே, புகார் ஏதும் அளிக்க வேண்டாம்'' என போனில் பேசியிருப்பதால், இன்னும் பாதிக்கப்பட்ட பலர் புகார் அளிக்காமல் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார், ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக செயல்படுவதாக எழுந்த புகாரின் பேரில், இந்த வழக்கு கடந்த 2022, அக்டோபர் மாதம் தஞ்சாவூர் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

இதையடுத்து, அண்மையில் தஞ்சை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார், சித்ரா சிட்பண்ட் நிறுவனத்தில் உள்ள ஆவணங்களை விசாரணை மேற்கொள்வதற்காக எடுக்கச் சென்றனர். ஆனால், போலீஸார் ஆவணங்களை எடுத்துச் சென்றால் அழித்துவிடுவார்கள் என, அவர்களை ஆவணங்களை எடுக்க விடாமல், பணம் கட்டி ஏமாந்தவர்கள் தடுத்தனர்.

இந்நிலையில், சித்ரா சிட்பண்ட்ஸ் நிறுவனம் இயங்கி வந்த அந்தக் கட்டிட உரிமையாளர், தனக்கு நிறுவனம் இயங்கி வந்த அலுவலகம் திரும்ப வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவருடன் சேர்ந்து பொருளாதார குற்றப்பிரிவுப் போலீசாரும் ஆவணங்களை எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டனர். இதைத்தொடர்ந்து, நீதிமன்றம் அந்த அலுவலகத்தில் இருந்த ஆவணங்களை எடுக்க அனுமதி வழங்கியது.

இதையடுத்து, இன்று காலை தஞ்சாவூர் பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி-யான பூரணி தலைமையிலான போலீஸார், பணம் செலுத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில், ஆவணங்கள் இருந்த 9 பீரோக்களை கைப்பற்றி, தஞ்சாவூர் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர். இதனால், அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

இத்தொடர்பாக அந்தப்பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''சிட்பண்ட் மோசடியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், 1,300 பேர் தான் புகார் அளித்துள்ளனர். தற்போது சிட்பண்ட் தொடர்பான ஆவணங்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் எடுத்துச் சென்றுள்ளனர். இனியாவது துரித நடவடிக்கையை மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாகப் பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE