புதுச்சேரி: பெண்ணைக் கொலை செய்து உடல் சாக்கு மூட்டையில் கட்டி கல் குவாரியில் வீச்சு

By அ.முன்னடியான்

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கம் அடுத்த வடுக்குப்பம் பெருமாள் கோயில் வீதியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். இவரது மனைவி இளவரசி (36). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 8 வருடங்களுக்கு முன்பு கணவரை பிரிந்த இளவரசி பிள்ளைகளுடன் வடுக்குப்பத்திலேயே வசித்து வந்துள்ளார். இதையடுத்து இளவரசிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ராஜூ (எ) கிருஷ்ணப்பன் (48) என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி இளவரசி வீட்டுக்கு கிருஷ்ணப்பன் வந்து சென்றுள்ளார்.

இதனிடையே கடந்த 9ம் தேதி வீட்டிலிருந்து இளவரசி மாயமானார். அவரை பிள்ளைகள், உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் இளவரசியின் தாய் ஆதிலட்சுமி நேற்று நெட்டப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் கீர்த்தி வர்மன் தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், இளவரசிக்கும் கிருஷ்ணப்பனுக்கும் இடையே இருந்த உறவு தெரியவந்துள்ளது. இதனால் அவர் மீது சந்தேகமடைந்த போலீஸார், கிருஷ்ணப்பனை பிடித்து விசாரித்தனர். அதில், இளவரசியை கொலை செய்ததை கிருஷ்ணப்பன் ஒப்புக்கொண்டார். அதன்படி, கடந்த 9ம் தேதி இரவு இளவரசி வீட்டுக்குச் சென்ற, கிருஷ்ணப்பன், இளவரசியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் தகராறு முற்றியதால் ஆத்திரமடைந்த கிருஷ்ணப்பன், இளவரசியை கன்னத்தில் அறைந்துள்ளார்.

இதில் அவர் மயங்கி விழுந்துள்ளார். அப்படியும் ஆத்திரம் தீராத கிருஷ்ணப்பன், அங்கிருந்த நைலான் கயிற்றால் இளவரசியின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். பின்னர் உடலை சாக்கு மூட்டையில் கட்டி, அதனை வாழை இலையால் மூடி இருசக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு அன்று இரவே வடுக்குப்பத்தில் இருந்து தமிழக பகுதியான திருவக்கரைக்கு சென்றுள்ளார். பிறகு, உடலை அங்குள்ள கல் குவாரி பகுதியில் வீசிவிட்டு வந்துள்ளார்.

விசாரணையில் கிடைத்த தகவலை அடுத்து, இன்று திருவக்கரை கல் குவாரி பகுதிக்கு கிருஷ்ணப்பனை அழைத்துச் சென்ற நெட்டப்பாக்கம் போலீஸார், அங்கு சாக்கு மூட்டையில் கட்டி வீசப்பட்ட இளவரசியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கிருஷ்ணப்பனை கைது செய்த போலீஸார், அவரை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE