கணக்கில் வராத ரூ.11.70 லட்சம் பறிமுதல்: உதகை நகராட்சி ஆணையர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

By ஆர்.டி.சிவசங்கர்

உதகை: கணக்கில் வராத ரூ.11.70 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் உதகை நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

உதகை நகராட்சி ஆணையராக கடந்த ஆகஸ்ட் மாதம் ஜஹாங்கீர் பாஷா பொறுப்பேற்றார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அனுமதி இல்லாத மற்றும் விதி மீறிய கட்டிடங்களுக்கு அனுமதி வழங்குதல், வாகன நிறுத்தங்களுக்கு தனியாருக்கு அனுமதி வழங்குதல் உள்ளிட்ட விதிமீறல்களை பணம் பெற்றுக்கொண்டு அனுமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் உதகை நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா உட்பட முக்கிய அதிகாரிகளை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கடந்த சில நாட்களாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை பணியை முடித்துக் கொண்டு வாடகை காரில் சொந்த ஊரான சென்னைக்கு ஆணையர் ஜஹாங்கீர் பாஷா சென்று கொண்டிருந்தார். அவர் செல்லும் வழியில் ஒரு சில இடங்களில் பணம் வாங்கிக் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் உதகை கோத்தகிரி சாலையில் தொட்ட பெட்டா சந்திப்பு பகுதியில் நகராட்சி ஆணையர் சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

சோதனையின்போது, காரில் கணக்கில் வராத ரூ.11 லட்சத்து 70 ஆயிரம் பணம் இருப்பது தெரியவந்தது. மேலும், பணம் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் நகராட்சி ஆணையரிடம் கேள்வி கேட்டபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால், காரில் இருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரிடம் 10 மணி நேரம் விசாரணை நடத்தி, அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், உதகை நகராட்சி ஆணையர் பொறுப்பில் இருந்த ஜஹாங்கீர் பாஷா, தற்காலிகமாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசு இன்று உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து உதகை நகராட்சி பொறியாளருக்கு, நகராட்சி ஆணையர் பணி கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டு உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE