உத்தரப் பிரதேசம்: எட்டாவா பகுதியை சேர்ந்த நகை வியாபாரி ஒருவர் தனது மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் மகனுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, ஓடும் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
முகேஷ் வர்மா என்ற அந்த நபர், திங்கள்கிழமை மாலை தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளின் சடலங்களின் புகைப்படங்களை தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பதிவேற்றியதால் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த அதிர்ச்சி தரும் குழப்பமான படங்களைப் பார்த்ததும், உறவினர்கள் அவர்களது வீட்டில் உள்ள அறைகளை சோதனை செய்து, சடலங்களைக் கண்டனர்.
வர்மாவின் மனைவி ரேகா, மகள்கள் பவ்யா (22), காவ்யா (17), மகன் அபிஷ்த் (12) ஆகியோரின் உடல்கள் நகைக்கடை இருந்த நான்கு மாடிக் கட்டிடத்தில் தனித்தனி அறைகளில் கிடந்ததாக எட்டாவாவின் மூத்த காவல் கண்காணிப்பாளர் சஞ்சய் குமார் தெரிவித்தார்.
முகேஷ் வர்மா சகோதரர்களுடன் சேர்ந்து வாழ்ந்தார். குடும்பத் தகராறு காரணமாக இந்தக் கொலைகள் நடந்துள்ளன. அதைத் தொடர்ந்து வர்மா ரயில் நிலையத்திற்குச் சென்று மருதர் எக்ஸ்பிரஸ் முன் குதிக்க முயன்றார். இதனையடுத்து மக்கள் எச்சரிக்கை எழுப்பியதால், ஆர்பிஎஃப் வீரர்கள் அவரைக் காப்பாற்றினர். இருப்பினும் வர்மாவுக்கு சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டன.
» ‘கலெக்டர் ப்ரோ’ உட்பட 2 கேரள ஐஏஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் - ஒழுங்கின்மைக்காக கேரள அரசு அதிரடி
உயிரிழந்த 4 பேரின் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக எஸ்எஸ்பி சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.