மதுரை: மதுரை நத்தம் சாலை மேம்பாலத்தில் நள்ளிரவு மது அருந்தும், இளைஞர்கள், பாட்டில்களை பாலத்திலே போட்டு செல்கின்றனர். அதனால், நெடுஞ்சாலைத் துறை ரோந்து போலீஸாரின் கண்காணிப்பு குறைவால் இரவு நத்தம் மேம்பாலத்தில் செல்வதற்கு, வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மதுரை தல்லாக்குளம் முதல் நத்தம் வரை 35 கி.மீ., தொலைவிற்கு ரூ.1,028 கோடியில் நான்கு வழிச்சாலையையும், இந்த சாலையில் தல்லாக்குளம் முதல் ஊமச்சிக்குளம் வரை நகர் பகுதியில் 7.3 கி.மீ., தொலைவில் ரூ.613 கோடியில் கட்டிய பறக்கும் பாலத்தையும் மக்கள் பயன்பாட்டிற்கு கடந்த ஆண்டு பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த சாலையும், மேம்பாலமும் வந்த பிறகு நத்தம் சாலையில் மதுரை மாநகரம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. ஊமச்சிக்குளத்தை தாண்டி தற்போது, குடியிருப்புகள் அதிகளவு வரத் தொடங்கியுள்ளன.
திருச்சி, சென்னை மற்றும் திண்டுக்கல் செல்வோரும், தற்போது நத்தம் மேம்பாலத்தை அதிகளவு பயன்படுத்த தொடங்கியுள்ளனர். அதனால், இரவு, பகல் வேளைகளில் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நத்தம் பறக்கும் பாலம் பயன்பாட்டிற்கு வந்தது முதல், தற்போது வரை இளைஞர்கள், விலை உயர்ந்த பைக்கில் பகல், இரவு வேளைகளில் அதிவேகமாக ஓட்டிச்சென்று சாலையில் செல்லும் மக்களை பயமுறுத்தும் வகையில் சாகசம் செய்கின்றனர்.
சில இளைஞர்கள், மேம்பாலத்தில் மோதி உயிரிழக்கவும் செய்துள்ளனர். பலர் படுகாயமும் அடைந்துள்ளனர். அதன் பிறகும், இளைஞர்கள் இரவு நேரத்தில் பைக்கில் சாகசம் செய்வது குறையவில்லை. மேலும், பைக்கில் சாகசம் செய்யும் போது அதனை வீடியோ எடுத்து சமூக வலை தளங்களில் பகிரவும் செய்கின்றனர். அப்படி பகிரப்படும் வீடியோக்களை வைத்து மாநகர போக்குவரத்து காவல்துறையினர் நடவடிக்கையும் எடுக்கின்றனர்.
» மணிப்பூரில் பாதுகாப்புப் படையினருடன் துப்பாக்கிச் சண்டை: 11 குக்கி தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஆனாலும், பைக்கில் சாகசம் செய்யும் இளைஞர்களின் அட்டகாசம் குறையவில்லை. மாநகர போக்குவரத்து காவல்துறை, நெடுஞ்சாலைத் துறை ரோந்து போலீஸார் பற்றாக்குறையால் அவர்களால் நத்தம் மேம்பாலத்தில் முழுமையாக கண்காணிப்புப் பணி மேற்கொள்ள முடியவில்லை. அதனால், தற்போது பைக் சாகச இளைஞர்களை தாண்டி, மது பிரியர்களும் கண்காணிப்பு இல்லாத நத்தம் மேம்பாலத்தில் இரவு நேரத்தில் மது குடிக்கின்றனர்.
மது பாட்டில்களை, மேம்பாலத்திலே போட்டு செல்கின்றனர். மது குடிப்போரால் தற்போது நத்தம் மேம்பாலத்தில் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் செல்வதற்கு அச்சமடைந்துள்ளனர். அதனால், மாலை 7 மணிக்கு மேல், பெரும்பாலான வாகனங்கள், நத்தம் மேம்பாலத்தை பயன்படுத்தாமல் கீழே உள்ள சாலையில் செல்வதால் வழக்கம்போல் போல் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.
மாநகர காவல்துறையும், நெடுஞ்சாலைத் துறை ரோந்து போலீஸாரும், இணைந்து ஷிஃப்ட் போட்டு, இரவு நேரத்தில் நத்தம் மேம்பாலத்தில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட வேண்டும். பைக்கில் சாகசம் செய்வோரையும், மது குடிப்போரையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.