மதுரை: மதுரை கீழவாசல் சிஎஸ்ஐ தேவாலய உறுப்பினர்களை தாக்கியதாக 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மதுரை புது மீனாட்சி நகரைச் சேர்ந்த ராஜாசெல்வம் மதுரை காவல் ஆணையர் லோகநாதனிடம் கொடுத்த புகார் ஒன்றில் கூறியிருப்பதாவது: நான் மதுரை கீழவாசல் சிஎஸ்ஐ மகிமை ஆலயத்தில் 40 ஆண்டாக உறுப்பினராகவும், 10 ஆண்டாக கமிட்டி உறுப்பினராகவும் உள்ளேன். எங்களது ஆலயத்தில் பொருளாளராக பணிபுரிந்த டேவிட் துரைசிங் பாஸ்ட்ரேட் கமிட்டி உறுப்பினராக இருந்தார்.
இவர் உட்பட 20 உறுப்பினர்களின் பணிக்காலம் முடிந்த போதிலும், தமிழகத்திலுள்ள எந்த கிறிஸ்துவ ஆலயத்திலும் புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க தேர்தல் கூடாது என, உச்சநீதிமன்றம் தடை உள்ளது. இருப்பினும், புதிய கமிட்டி உறுப்பினர்கள் பொறுப்பேற்கும் வரையிலும், பழைய உறுப்பினர்களே பொறுப்பில் இருக்கலாம் என்பது சட்டவிதி. ஆனாலும், தற்போது போதகராக இருக்கும் ராஜா ஸ்டாலின் எங்களுக்கு எதிராக செயல்படுகிறார்.
ஒன்றரை ஆண்டாக ஆலய காணிக்கை திருடுகிறார். கமிட்டி உறுப்பினர்களை பணி செய்யவிடாமல் ஆலய பணியாளர்கள் சாலமோன்ராஜ், ஆபிரகாம், அவரது மகன்கள் செர்வின் சாந்த் சுதன், ஜான் ரத்தீஸ் ரோசி, வில்லியம் ராஜன், காந்தி மகன் திலீப்ராஜ் மற்றும் மார்ட்டின், ஆபேத் மனோகர் ஆகியோர் மூலம் பழைய உறுப்பினர்களை பணி செய்யவிடாமல் தடுக்கிறார். இதெல்லாம் போதகர் ராஜா ஸ்டாலின் தூண்டுதலில் நடக்கிறது.
» “திமுக மிகப் பெரிய தோல்வி அடையும்; 2026-ல் அதிமுக ஆட்சி!” - எஸ்.பி.வேலுமணி நம்பிக்கை
» “ராஜராஜ சோழன் சமாதி இங்குதான் உள்ளதாக தெரிந்தால்...” - எம்எல்ஏ தகவல்
இந்நிலையில், கடந்த 3ம் தேதி ஆலயத்தில் சபை போதகர் வரவு, செலவு விவரம் வாசித்தபோது, செலவு கணக்கை ஏன் வாசிக்கவில்லை என, சபை மக்கள் கேட்டபோது, ஆபிகாம் உள்ளிட்ட அவரது அடியாட்கள் சபை உறுப்பினர்களை தாக்கினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என, குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க, காவல் ஆணையர் உத்தரவிட்டார். ராஜா செல்வம் புகாரின்பேரில் வண்டியூர் ஆபிரகாம் , அவரது மகன்கள் செரின் சாந்த் சுதன், வில்லியம் ராஜன் மற்றும் சாலமோன் ராஜ், ஆபேத் மனோகர், திலீப்ராஜ் மீது விளக்குத்தூண் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். ஏற்கனவே ஆபிரகாம் கொடுத்த புகாரில், ராஜா செல்வம் தரப்பிலும் 3 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.