தாராபுரம் அருகே கிணற்றில் தாய், மகள் சடலம் மீட்பு - போலீஸார் விசாரணை

By எம்.நாகராஜன்

தாராபுரம்: தாராபுரம் அருகே மர்மமான முறையில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட தாய், மகள் உயிரிழப்பு குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள ஊத்துப்பாளையம், ர.பட்டினம், லேட் சுப்பையா கவுண்டர் மனைவி மயிலாத்தாள் (87). கொண்டரசன்பாளையம் முதலைச்சாமி என்பவரது மனைவி புஷ்பவள்ளிநாயகி (63). இவர்கள் இருவரும் அம்மாள் - மகள் உறவு உள்ளவர்கள். இவர்கள் அருகில் உள்ள பொன்னம்மாள் தோட்டம் பகுதியில் உள்ள 40 அடி ஆழ கிணற்றில் இன்று சடலமாக கிடந்தனர். தகவல் அறிந்த அலங்கியம் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், நேற்று (நவ.9-ம் தேதி) இருவரும் இயற்கை உபாதை கழிப்பதற்காக காட்டுப் பகுதிக்குள் சென்றனர். அப்போது மயிலாத்தாள் கால் தவறி கிணற்றுக்குள் விழுந்துள்ளார். அவரை காப்பாற்ற முயன்ற மகளும் கிணற்றில் விழுந்துள்ளார். இருவரும் கிணற்று நீரில் தத்தளித்துள்ளனர். இரவு நேரம் என்பதால் காப்பாற்றுவதற்கு யாரும் வரவில்லை இந்த நிலையில் இன்று காலை அதே பகுதிக்கு சென்ற ஒருவர் கிணற்றைப் பார்த்தபோது அதில் இருவரும் பிணமாக மிதந்து கிடந்தனர்.

தாராபுரம் தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலர் ராஜா ஜெய் சிங் ராவ் உடன் தீயணைப்பு நிலைய வீரர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று கிணற்றில் மிதந்து கிடந்த தாய், மகள் இருவரின் சடலத்தை ஒரு மணி நேரம் போராடி கயிறை கட்டி மேலே எடுத்து வந்தனர். இச்சம்பவம் குறித்து அலங்கியம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE