தவறாக வழக்குப் பதிவு செய்ததாக காவல் ஆய்வாளர் உட்பட 2 பேர் இடைநீக்கம்

By KU BUREAU

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூரில் டிராவல்ஸ் வைத்திருந்த அருள் முருகனுக்கும், அங்கு பணி செய்த மேலாளர் சிவானந்தத்துக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறின் தொடர்ச்சியாக தனது கார், பேருந்துகளின் கண்ணாடியை மேலாளர் சிவானந்தம் உடைத்துவிட்டதாக அருள் முருகன் புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் அப்போது ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருந்த பரந்தாமன்,உதவி ஆய்வாளராக இருந்த துளசிராமன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்தனர். இதில் பரந்தராமன் தற்போது உத்திரமேரூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக உள்ளார். துளசிராமன் திருவள்ளூர் மாவட்ட குற்றப் பிரிவில் உதவி ஆய்வாளராக உள்ளார். சிவானந்தம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

அவர் ஜாமினில் வெளியே வந்ததும் அந்த கார் மற்றும் பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டதாக கூறப்படும் நாளில் தான் ஊரிலேயே இல்லை என்றும், வெளியூரில் இருந்ததாகவும் அதற்கான ஆவணங்களையும், வீடியோ ஆதாரங்களையும் காவல் துறை உயரதிகாரிகளிடம் தாக்கல் செய்தார். தவறான வழக்குப் பதிவு செய்த பரந்தராமன், துளசி ராமன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனு அளித்தார். மேலும் இது தொடர்பாக சிவானந்தம் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தார். தன்னிடம் இருந்த ஆதாரங்களை நீதிமன்றத்திலும் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு பரிந்துரை செய்தது.

இதனைத்தொடர்ந்து ஆய்வாளர் பரந்தராமன், உதவி ஆய்வாளர் துளசி ராமன் ஆகிய இருவரையும் இடை நீக்கம் செய்து வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் உத்தவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE