திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே லாரிகள் ஒன்றன் மீது ஒன்றாக மோதி ஏற்பட்ட விபத்தில் லாரி ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு லாரி ஓட்டுநர் படுகாயம் அடைந்தார்.
திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூரில் இருந்து ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டி தொழில் பூங்கா நோக்கி சரக்கு லாரி ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. கும்மிடிப்பூண்டி அருகே சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த மற்றொரு சரக்கு லாரி மீது மோதியது. இதனால் அந்த சரக்கு லாரி,அதற்கு முன்பாக சென்று கொண்டிருந்த மற்றொரு சரக்கு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையை சேர்ந்த நாகராஜ் (52) என்ற ஓட்டுநர் விபத்துக்குள்ளான இரண்டு சரக்கு லாரிகளுக்கு இடையே சிக்கி உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவஇடத்துக்கு வந்த சிப்காட் போலீஸார், தீயணைப்பு துறை வீரர்களின் உதவியுடன் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு சரக்கு லாரி ஓட்டுநர் லட்சுமணன் என்பவரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், உயிரிழந்த லாரி ஓட்டுநர் நாகராஜின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்துடன் தொடர்புடைய நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத மற்றொரு சரக்கு லாரி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
» சென்னை: கொலை முயற்சி வழக்கில் 5 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த நபர் கைது
» 60 ரூபாய் வழிப்பறி வழக்கில் 27 ஆண்டாக தலைமறைவாக இருந்தவர் கைது @ மதுரை