தென்காசி: தென்காசி மாவட்டம், பாவூர்சத் திரம், சமாதானபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சகாயராஜ் (53). மேடை பாடகரான இவருக்கு மனைவி, ஒரு மகன் உள்ளனர். நிதி நிறுவன கடன் தொல்லையால் சகாயராஜ் வீடியோ வெளியிட்டு, கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்த தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீஸார், விரைந்து சென்று, சகாயராஜ் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். சகாயராஜ் வெளியிட்டுள்ள வீடியோவில், “கடந்த 2011-ம் ஆண்டு தனியார் நிதி நிறுவனத்தின் மூலம் கடன் பெற்று கார் வாங்கியிருந்தேன்.
அப்போது மார்கெட்டிங்கில் வேலை பார்த்து வந்தேன். இந்நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டு, வேலைக்கு செல்ல முடியாததால், கடனை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. கடனை செலுத்தாததால் நிதி நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் காரை பறிமுதல் செய்து, எடுத்துச் சென்றுவிட்டனர்.
கடந்த 8 ஆண்டுகளாக எந்த தகவலும் கொடுக்காமல் 2020-ம் ஆண்டு என் மீது வழக்கு தொடர்ந்து, நெருக்கடி கொடுத்து வருகின்றனர். நான் விசாரித்தவரை என்னிடம் இருந்து பறிமுதல் செய்த வாகனத்தை ஏலம் விட்டு, கணக்கை சீர் செய்த வகையில் நிதி நிறுவனத்துக்கு எந்த நஷ்டமும் ஏற்படவில்லை. ஆனால் அராஜகமாக நடந்துகொண்டு எனது சொத்துகளை பறிமுதல் செய்ய முயற்சிக்கிறார்கள்.
» சென்னையில் சுய உதவிக் குழுக்களின் இயற்கை சந்தை தொடக்கம்
» கரூர்: மனைவி, மகளை கழுத்தறுத்துக் கொன்றுவிட்டு கூலித்தொழிலாளி தற்கொலை முயற்சி
எனக்கு வேறு வழி தெரியாததால் என்னை நானே மாய்த்துக்கொள்கிறேன். காவல் துறை முறையான விசாரணை நடத்தி, நிதி நிறுவன மேலாளர், நெருக்கடி கொடுத்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் இருவரும்தான் எனது மரணத்துக்கு காரணம். இதுபோல் இந்த நிதி நிறுவனத்தினர் எத்தனை உயிர்களை காவு வாங்க போகிறார்கள் என்பது தெரியவில்லை. அவர்களிடம் இருந்து அப்பாவி மக்களையும், என் குடும்பத்தையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.