உத்தரப் பிரதேசம்: மீரட்டின் கன்கெர்கெடாவில் 5 தெருநாய்க்குட்டிகள் மீது பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்த குற்றச்சாட்டில் இரண்டு பெண்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நவம்பர் 5 ஆம் தேதி கன்கெர்கெடா பகுதியைச் சேர்ந்த ஷோபா மற்றும் ஆர்த்தி எனும் இரு பெண்கள், அப்பகுதியில் நாய்க்குட்டிகள் தொடர்ந்து சத்தம் போட்டதால் எரிச்சலடைந்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் அந்த 5 நாய்க்குட்டிகள் மீதும் பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்துக்கொன்றனர்.
உள்ளூர்வாசிகள் இதனை எதிர்த்து கேள்வி கேட்டபோது, அந்தப் பெண்கள் அனைவரையும் எதிர்த்து பேசி வசைபாடினர். இதன் பின்னர் குடியிருப்பாளர்கள் போலீஸாருக்கு போன் செய்ததையடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். இதனையடுத்து நாய்க்குட்டிகளின் உடல்களை அப்பகுதிவாசிகள் அடக்கம் செய்தனர். இப்பகுதியிலிருந்த தெருநாய் ஒன்று சமீபத்தில் 5 குட்டிகளை ஈன்றுள்ளது. இவை ஓயாமல் சத்தம் போட்டதால் எரிச்சலில் இப்பெண்கள் கொலை செய்துள்ளனர்.
இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படாததால், அனிமல் கேர் சொசைட்டியின் பொதுச் செயலாளர் அன்சுமாலி வசிஷ்த், உள்ளூர் வணிகத் தலைவர்களுடன் நேற்று மீரட்டில் உள்ள கன்கெர்கெடா காவல் நிலையத்திற்குச் சென்று சம்பவம் தொடர்பாக மற்றொரு புகாரை அளித்தார். இதனையடுத்து அப்பெண்கள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
» பாகிஸ்தானில் பயங்கரம்: ரயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 24 பேர் பலி
» கனமழையால் குன்னூரில் மலைப்பாதையில் ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர்வீழ்ச்சி
இதுபற்றி ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி ஜிதேந்திர குமார் கூறுகையில், “விலங்குகளை கொல்லுதல் அல்லது ஊனம் ஏற்படுத்துதல் போன்ற விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 325 இன் கீழ் பெண்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பிறகு இதுகுறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று குமார் கூறினார்.