கரூர்: மனைவி, மகளை கழுத்தறுத்துக் கொன்றுவிட்டு கூலித்தொழிலாளி தற்கொலை முயற்சி

By க.ராதாகிருஷ்ணன்

கரூர்: கரூரில் குடும்பப் பிரச்சினையில் கூலித் தொழிலாளி ஒருவர் தனது மனைவி, மகளை கழுத்தறுத்துக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் வெங்கமேட்டில் உள்ள விஜி நகரைச் சேர்ந்தவர் செல்வகணேஷ் (45). விசைத்தறி தொழிலாளியான இவர் மனைவி கல்பனா (38), மகள் சாரதிபாலா (5). சாரதி பாலா அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்தார். இந்த நிலையில், இன்று காலையில் செல்வகணேஷ் வீட்டில் இருந்து சத்தம் வந்துள்ளது.

அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்த போது வீட்டினுள் கல்பனாவும், சாரதி பாலாவும் ரத்த வெள்ளத்தில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தனர். அருகிலேயே செல்வகணேஷும் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் வெங்கமேடு போலீஸாருக்கு தகவல் அளித்தனர். உடனே அங்கு வந்த போலீஸார் செல்வகணேஷை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், கல்பனா, சாரதிபாலாவின் உடல்களை பிரேதப் பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில், தென்காசியை சேர்ந்த செல்வகணேஷ் கரூரில் குடும்பத்துடன் வசித்து வந்ததாகவும் குடும்பத்தகராறு காணமாக மனைவி, மகளை கழுத்தறுத்துக் கொன்றுவிட்டு கொசுவிரட்டி திரவத்தை குடித்து செல்வகணேஷ் தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்துள்ளது. மனைவி, மகளை கணவரே கழுத்தறுத்துக் கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE