சிவகாசி அருகே பைக் மீது தனியார் பஸ் மோதி விபத்து - கட்டுமான தொழிலாளி உயிரிழப்பு; 3 பேர் காயம்

By அ.கோபால கிருஷ்ணன்

ஶ்ரீவில்லிபுத்தூர்: சிவகாசி - ஶ்ரீவில்லிபுத்தூர் சாலையில் டி.மானகசேரி விலக்கில் பைக் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் கட்டுமான தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தில் காயமடைந்த மேலும் 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

சிவகாசி அருகே டி.மானகசேரியை சேர்ந்த தங்கம் மகன் பால்சாமி (55). கட்டுமான தொழிலாளியான இவர் இன்று காலை தனது பைக்கில் டி.மானகசேரியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (35), வைரவன் (51) ஆகியோருடன் வேலைக்குச் சென்றார். சிவகாசி - ஶ்ரீவில்லிபுத்தூர் சாலையில் சென்ற போது, பின்னால் அருப்புக்கோட்டையில் இருந்து ராஜபாளையம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து பைக் மீது மோதியது. இதில் பால்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

காயமடைந்த கிருஷ்ணமூர்த்தி, வைரவன் ஆகியோர் சிவகாசி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்கு பின், மேல்சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்தில் எதிர் திசையில் வந்த பைக் மீதும் பேருந்து மோதியது. இதில் அந்த பைக்கில் வந்த வள்ளி நாயகம் (75) காயமுற்று சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து மல்லி போலீஸார் தனியார் பேருந்து ஓட்டுநர் ஜெயபாண்டி(48) மீது வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

சிவகாசி - ஶ்ரீவில்லிபுத்தூர் சாலையில் வேகமாகச் செல்லும் வாகனங்களால் விபத்துகள் நடப்பது தொடர் கதையாகி உள்ளது. தற்போது சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால பணிகள் காரணமாக மாற்றுப்பாதையில் வாகனங்கள் 10 கிலோ மீட்டர் சுற்றிச் செல்ல வேண்டும் என்பதால் குறித்த நேரத்தில் செல்ல வேண்டும் என்பதற்காக தனியார் பேருந்துகள் அதிவேகமாகச் சொல்வதால் விபத்துகள் அதிகரித்துள்ளன. இதனால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் இந்த ரூட்டில் அச்சத்துடன் பயணித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE