டெஸ்ட் டிரைவ் போவதாக சொல்லி நாடகம்: வாகன ஷோரூமில் இருந்து பைக் திருடிய இளைஞன் கைது

By KU BUREAU

உத்தரப் பிரதேசம்: ஆக்ராவில் உள்ள ஒரு ஷோரூமில் இருந்து டெஸ்ட் டிரைவ்-க்காக இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்பியோடிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

சாஹில் என்பவர் நவம்பர் 3-ம் தேதி ரூ.1 லட்சம் விலையுள்ள செகண்ட் ஹேண்ட் ரேஸ் பைக்கை வாங்க வேண்டும் என சொல்லி விற்பனை நிலையத்துக்கு வந்துள்ளார். பைக்கின் விலை குறித்து கேட்ட பிறகு, தனது தந்தையுடன் திரும்பி வந்து விலையை உறுதி செய்வதாக சாஹில் உறுதியளித்தார்.

இதன்பின்னர் சாஹில் உடனடியாக ஒரு வயதான மனிதருடன் திரும்பி வந்தார். அவரை தனது தந்தை என்று அறிமுகப்படுத்தினார். இதனால், சோதனை ஓட்டத்திற்கு மோட்டார் சைக்கிளை எடுத்துச் செல்ல அவர்கள் அனுமதித்தனர். சாஹிலிடம் சாவியைக் கொடுத்தவுடன், அந்த முதியவரை ஷோரூமில் விட்டுவிட்டு வேகமாக பைக்கை எடுத்துச் சென்றார்.

பல மணிநேரம் கடந்தும் சாஹல் திரும்பி வராததால், ஷோரூம் உரிமையாளர் சந்தேகமடைந்து, அந்த முதியவரிடம் விசாரித்தனர். அப்போது அந்த முதியவர் தான் சாஹிலின் தந்தை அல்ல என்றும், தேநீர் விற்பவர் என்றும் தெரிவித்தார். சாஹில் அடிக்கடி தனது கடைக்கு தேநீர் அருந்த வருவதாகவும், ஒரு முக்கியமான வேலைக்காக தன்னுடன் வரும்படி கேட்டுக் கொண்டதாகவும் அவர் கூறினார்.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஷோரூம் உரிமையாளர் லோஹாமண்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில், நவம்பர் 5 ஆம் தேதி எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகளைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர். சில நாட்கள் விசாரணைக்குப் பிறகு, நவம்பர் 6-ம் தேதி சாஹில் கைது செய்யப்பட்டு, திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் அவனிடம் இருந்து மீட்கப்பட்டது.

விசாரணையின் போது, ​​சாஹில் போலீஸாரிடம், தனக்கு எப்போதும் மோட்டார் சைக்கிள்கள் மீது மிகுந்த ஆர்வம் இருந்ததாகவும், ஆனால் தனது குடும்பத்தின் பொருளாதாரப் பிரச்சனையால் அதை வாங்க முடியவில்லை என்றும் கூறினார். அதிவேக பைக் வாங்கும் ஆசையை பூர்த்தி செய்ய, இவ்வாறு திருட திட்டம் தீட்டியதாகவும் அவர் கூறினார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE