விரைவு ரயிலில் 4 கிலோ கஞ்சா கடத்திய ஜார்க்கண்ட் இளைஞர் கைது

By மு.வேல்சங்கர்

சென்னை: ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் வந்த விரைவு ரயிலில் கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்த ஜார்க்கண்ட மாநில இளைஞரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் ஆய்வாளர் கோவிந்த ராஜ் தலைமையிலான ரயில்வே போலீஸார் புதன் கிழமை இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து சென்னை வழியாக கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு செல்லும் ஒரு விரைவு ரயில் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 6-வது நடைமேடைக்கு வந்தடைந்தது.

அதிலில் இருந்து இறங்கி வந்த பயணிகளை கண்காணித்தபோது, ஒரு இளைஞர் மீது ரயில்வே போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரை பிடித்து விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணாக பேசினார். அவரது பைகளை சோதித்த போது, அதில் மூன்று பொட்டலங்கள் இருந்தன. அவற்றை திறந்து பார்த்த போது, 4 கிலோ எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.

இதன் மதிப்பு ரூ.80,000. இதையடுத்து அவரை ரயில்வே காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில், அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த உபேந்திர யாதவ் (19) என்பதும், ஜார்க்கண்டில் இருந்து ரயிலில் கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். அவரிடமிருந்த கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE