ஆவடி: சென்னை, உள்ளகரம் மற்றும் திருமங்கலம் பகுதிகளை சேர்ந்தவர்கள் பாலன் (57), பாலு (51). இவர்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருவள்ளூர், ஜெ.என் சாலை, கோபாலபுரம் பகுதியை சேர்ந்த காமேஸ்வரகுமார்(58), அவரது மனைவி அருணா (54) ஆகியோரது அறிமுகம் கிடைத்துள்ளது. அப்போது, பாலன், பாலுவிடம், காமேஸ்வரகுமார் தான் நிலத்தரகராக பணியாற்றி வருவதாகவும், தன் மனைவி அருணா தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் பணிபுரிந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, அவர் தன் மனைவி அருணா மூலம் அயப்பாக்கம், அண்ணாநகர், செம்மஞ்சேரி பகுதிகளில் தமிழ்நாடு குடிசை மாற்றுவாரியம், வீட்டு வசதி வாரிய வீடுகளை வாங்கித் தர முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
பிறகு, பாலன், பாலுவை சந்தித்த காமேஸ்வரகுமாரின் மனைவி அருணா, ‘குடிசை மாற்று வாரிய வீடுகள் வாங்க, ஒரு வீட்டுக்கு ரூ.1.80 லட்சமும், வீட்டு வசதி வாரியவீடுகள் வாங்க, ஒரு வீட்டுக்கு ரூ.5 லட்சமும் கொடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய பாலன், பாலு ஆகியோர் 2017-ம் ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் தங்கள் உறவினர்கள், நண்பர்கள் உட்பட 41 பேரிடம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மற்றும் வீட்டு வசதி வாரிய வீடுகளை வாங்கித் தருவதாக கூறி ரூ.76.75 லட்சம் பணத்தை பெற்று, காமேஸ்வரகுமார், அருணா ஆகியோரிடம் கொடுத்துள்ளனர்.
ஆனால், பணம் கொடுத்து நீண்ட காலமாகியும், காமேஸ்வரகுமார், அருணா இருவரும் உறுதியளித்தபடி வீடுகளை வாங்கித் தராததோடு, வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுக்காததால், சந்தேகம் அடைந்த பாலன், பாலு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மற்றும் வீட்டுவசதி வாரிய அலுவலகங்களில் விசாரித்துள்ளனர்.
அப்போது, தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாலு, பாலன் ஆகியோர் அளித்தபுகாரின் அடிப்படையில், ஆவடி காவல் ஆணையரகத்தின் ஆவடி மத்திய குற்றப்பிரிவின் போலி ஆவணத் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிரவிசாரணை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில், காமேஸ்வர குமார், அவரது மனைவி அருணா ஆகியோரை நேற்று முன் தினம் போலீஸார் கைது செய்தனர்.