ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே பயங்கரம்: கொத்தனாரை தாக்கி ரூ.7.5 லட்சத்தை பறித்த மர்ம நபர்கள்

By அ.கோபால கிருஷ்ணன்

ஶ்ரீவில்லிபுத்தூர்: ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே வங்கியில் இருந்து பணம் எடுத்து வந்த கொத்தனாரை 4 பேர் பைக்கில் பின் தொடர்ந்து வந்து தாக்கி ரூ.7.5 லட்சத்தை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தைலா குளம் வடக்குத் தெருவைச் சேர்ந்த பெரியசாமி (56). இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவரது மகன் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். பெரியசாமி சொந்தமாக இடம் வாங்குவதற்காக ஶ்ரீவில்லிபுத்தூர் கனரா வங்கி கிளையில் உள்ள சேமிப்புக் கணக்கில் இருந்து இன்று பிற்பகல் 2 மணியளவில் ரூ.7.5 லட்சத்தை எடுத்துக் கொண்டு ஸ்கூட்டரில் வீட்டிற்கு வந்துள்ளார். அவரது மகனும், மனைவியும் மற்றொரு பைக்கில் வந்துள்ளனர்.

பெரியசாமி தைலா குளத்தில் உள்ள தனது வீட்டின் முன்பாக பைக்கை நிறுத்திய போது, அவரைப் பின் தொடர்ந்து இரண்டு பைக்குகளில் வந்த 4 பேர் பெரியசாமியை தாக்கிவிட்டு, அவரது பைக்கில் இருந்த ரூ.7.5 லட்சத்தை பறித்துச் சென்றனர். மக்கள் நடமாட்டம் உள்ள குடியிருப்புப் பகுதியில் பட்டப் பகலில் ஹெல்மெட், முகமூடி ஏதும் அணியாமல் மர்ம நபர்கள் வீட்டின் முன் நின்றவரை தாக்கி பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, சம்பவ இடத்தில் ஶ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி ராஜா நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். ஶ்ரீவில்லிபுத்தூர் கனரா வங்கி முதல் தைலா குளத்தில் பெரியசாமி வீடு வரையிலான பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE