மனைவி பெயரில் கணக்கு தொடங்கி ரூ.4.94 கோடி மோசடி: வங்கி மேலாளருக்கு 4 ஆண்டுகள் சிறை

By கி.மகாராஜன்

மதுரை: மனைவி பெயரில் வங்கியில் கணக்கு தொடங்கி ரூ.4.94 கோடி மோசடி செய்த வழக்கில் வங்கி மேலாளருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி எஸ்பிஐ வங்கி கிளை மேலாளராக இருந்தவர் கிரண் பாபு. இவர், கடந்த 2016-ல் தனது மனைவி நிஷிபா பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி பணம் பரிமாற்றம் செய்துள்ளார். இதில், ரூ.4 கோடியே 94 லட்சத்து 70 ஆயிரத்து 606-க்கு மோசடி செய்ததாக வங்கி மண்டல மேலாளர் அளித்த புகாரின் பேரில் சிபிஐ லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரித்தனர்.

இந்த விசாரணையில் முறைகேடு நடந்திருப்பது உறுதியானதால், கிரண் பாபு மீது பல்வேறு பிரிவுகளில் கடந்த 2018ல் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் அவரது மனைவி நிஷிபா சாட்சியாக சேர்க்கப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை மதுரை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.

இரு தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி எஸ்.சண்முக வேல், கிரண் பாபு மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப் பட்டதால் அவருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.3.70 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE