கடலூர்: குமராட்சியில் நள்ளிரவில் வாகன சோதனை ஈடுபட்ட போலீசாரை பேனா கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் குமராட்சி காவல் நிலைய தலைமை காவலர் ஜெயராமன் மற்றும் முதல்நிலை காவலர் தேவநாதன் ஆகிய இருவரும் நேற்று (நவ.5) இரவு சுமார் 1 மணியளவில் குமராட்சி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அவ்வழியாக புதுச்சேரி பதிவெண் கொண்ட பைக்கில் வந்த ஒரு நபரை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். குடிபோதையில் இருந்த அந்த நபர் போலீசாரை ஆபாசமாக திட்டியும், இருவரையும் பேனா கத்தியால் குத்திக் கீறிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதில் காயமடைந்த போலீசார் இருவரும் சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜாராம், பேனா கத்தியால் போலீசாரை குத்திவிட்டு தப்பியோடிய நபரைப் பிடிக்க உத்தரவிட்டார். அதன் பேரில் உதவி ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் டெல்டா பிரிவு போலீசார், இருசக்கர வாகனத்தின் பதிவெண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், போலீசாரை தாக்கியது புதுச்சேரி வில்லியனூர் கீழ் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் விஸ்வநாதன் (40) எனத் தெரிய வந்தது. இதையடுத்து இன்று காலையில் விஸ்வநாதனை கைது செய்த போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
» சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு: தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை
» சென்னை | ஏற்றுமதி நிறுவனத்தில் ரூ.5 லட்சம் பணத்தை திருடிய பெண் கைது