குரோம்பேட்டையில் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு

By பெ.ஜேம்ஸ் குமார்

தாம்பரம்: செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரதீப் (25), பிரகாஷ் (23). இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிலையில் வழக்கம்போல செவ்வாய்க்கிழமை (நவ.05) வேலையை முடித்துவிட்டு இருவரும் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது மாலை குரோம்பேட்டையில் இருந்து தாம்பரம் நோக்கி ஜிஎஸ்டி சாலையில் சென்று கொண்டிருந்தபோது தாம்பரம் காசநோய் மருத்துவமனை அருகே குரோம்பேட்டையில் இருந்து தாம்பரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசு மாநகர பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது வேகமாக மோதியதில் நிலை தடுமாறி இருவரும் இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்துள்ளனர்.

அப்போது பிரதீப் மீது மாநகரப் பேருந்தின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிரகாஷுக்கு கால் முறிந்து படுகாயங்களுடன் சாலையில் துடிதுடித்துக் கொண்டிருந்த நிலையில் அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் உயிரிழந்த பிரதீப் உடலை மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தினால் குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE