தூத்துக்குடி: தூத்துக்குடியில், இணையதள வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என இன்ஸ்டாகிராம் மூலம் ரூ.15.65 லட்சத்தை மோசடி செய்த நபரை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி கோமதிபாய் காலனியைச் சேர்ந்த ஒருவர் இன்ஸ்டாகிராமில் முதலீடு சம்பந்தமாக வந்த விளம்பரத்தைப் பார்த்து, அதில் உள்ள நபரை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அந்த நபர் சாஸோ (Saxo) என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிட்டுள்ள இணையதள பக்கத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதனை நம்பிய தூத்துக்குடி நபர் ரூ.15.65 லட்சம் பணத்தை அதில் முதலீடு செய்துள்ளார்.
ஆனால், எந்த லாபமும் வரவில்லை. இதையடுத்து, தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த தூத்துக்குடி நபர் இது தொடர்பாக தேசிய சைபர் குற்றப் பதிவு இணையதளத்தில் புகாரை பதிவு செய்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க எஸ்பி ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டார். அதன்பேரில் தூத்துக்குடி சைபர் க்ரைம் போலீஸார் தனிப்படை அமைத்து, தொழில்நுட்ப ரீதியாக விசாரணை நடத்தினர்.
அதில், பெங்களூரு குலிமாவ் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி மகன் பாண்டீஸ்வரன் (38) என்பவர் இந்த பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து தூத்துக்குடி தனிப்படை போலீஸார் பெங்களூரு சென்று பாண்டீஸ்வரனை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 21 செல்போன்கள், ஒரு லேப் டாப், ரொக்கப் பணம் ரூ.40 ஆயிரம், ஏடிஎம் கார்டுகள் மற்றும் ஒரு கார் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.
» நடிகை கஸ்தூரிக்கு எதிராக மதுரை காவல் ஆணையரிடம் நாயுடு மகாஜன சங்கம் புகார்!
» அம்பத்தூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் சிமென்ட் கல் - சதியா என விசாரணை
தொடர்ந்து பாண்டீஸ்வரனை தூத்துக்குடி அழைத்து வந்து, தூத்துக்குடி 4-வது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தி, தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைத்தனர். மேலும் இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.