மதுரை: நடிகை கஸ்தூரிக்கு எதிராக மதுரை மாநகர காவல் ஆணையரிடம் தமிழக நாயுடு மகாஜன சங்கத்தினர் புகார் அளித்தனர்.
தமிழக நாயுடு மகாஜன சங்கம் சார்பில், அதன் பொதுச் செயலாளர் ரமேஷ், மற்றும் போஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் மதுரை மாநகர காவல் ஆணையரிடம் அளித்த புகார் ஒன்றில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டில் எந்த மொழி, இன பாகுபாடின்றி அனைவரும் சமமாக அமைதி, ஒற்றுமையுடன் வாழ்கின்றனர். கடந்த 3ம் தேதி நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் இனமான எங்களது நாயுடு குல சமுதாய பெண்களை இழிவுச்சொல் கூறியும், இன குலத்தோர், நாடாண்ட மன்னர்களையும் இழிவுப்படுத்து நோக்கிலும் பேசியுள்ளார். தமிழக மக்களிடம் பிரிவினை, இனப்பிரச்சினையை தூண்டிவிடும் உள்நோக்கத்தோடு சாதிய இழிச் சொற்களை பேசி, எங்களது சமுதாய மக்களை மிகுந்த வேதனைக்கு உட்படுத்தியுள்ளார்.
அவரது சுய விளம்பரத்திற்காக, சிலரின் பின்புலத்தில் செயல்பட்டுள்ளார். ஒற்றுமையுடன் வாழும் மக்களிடையே பிரிவினையை உண்டாக்கி, சட்டம், ஒழுங்கை சீர் கெடுக்கும் எண்ணத்துடன் பொது நிகழ்ச்சி ஒன்றில் அவச் சொற்களை அவர் பேசியுள்ளார். தமிழக மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் எண்ணத்தில் செயல்பட்ட நடிகை கஸ்தூரி மீது சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்” என அதில் வலியுறுத்தியுள்ளனர். நிர்வாகிகள் கூறுகையில், “நடிகை கஸ்தூரியின் பேச்சு உலகம் முழுவதும் தெலுங்கு பேசும் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்காவிடின் நவ.,10ம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என்றனர்.