நாகர்கோவில்: நாகர்கோவில் மாவட்ட வன பாதுகாவலர் அலுவலகத்தில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வன ஊழியர் கைது செய்யப்பட்டார்.
நாகர்கோவில் வடசேரியில் உள்ள மாவட்ட வன பாதுகாவலர் அலுவலகத்தில். வடக்கு தாமரைக் குளத்தை சேர்ந்த மகாராஜா பிள்ளை என்பவர், தனது ஹாக்கா வில்லேஜுக்கு உட்பட்ட குலசேகரபுரத்தில் உள்ள ஐந்தரை சென்று நிலத்தில் பணிகள் செய்ய தடையின்மை சான்று கேட்டு விண்ணப்பித்துள்ளார். விண்ணப்பத்தின் படி என்ஓசி அளிக்க பூதப்பாண்டி பகுதியைச் சேர்ந்த மாவட்ட வன பாதுகாவலர் அலுவலகத்தில் காவலராக பணியாற்றும் பால்ராஜ் (56) என்பவர் ரூ.10 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். இந்தப் பணத்தை தராவிட்டால் சான்று கிடைக்க அதிக நாட்களாகும் எனவும் கூறியுள்ளார்.
அதனால் வேறு வழியின்றி அவரிடம் பேரம் பேசியபோது ரூ.10 ஆயிரம் தந்தால் மட்டுமே என்ஓசி கிடைக்கும் என்று கூறியுள்ளார். மேலும், தனது மூலம்தான் உயர் அதிகாரிகள் லஞ்ச பணம் பெறுவதாகவும், உயர் அதிகாரிகள் கூறியபடியே தான் பணம் கேட்பதாகவும் காவலர் கூறியுள்ளதாக தெரிகிறது. ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத மகாராஜா பிள்ளை, குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு ஏடிஎஸ்பி ஹெக்டர் தர்மராஜிடம் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார்.
அவருடைய ஆலோசனையின்படி ரசாயனம் தடவப்பட்ட ரூ.10 ஆயிரத்துடன் நாகர்கோவில் மாவட்ட வன பாதுகாவலர் அலுவலகத்திற்கு இன்று மதியம் சென்ற மகாராஜா பிள்ளை, அப்பணத்தை பால் ராஜிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக பால்ராஜை பிடித்து கைது செய்தனர். அவர் பெற்ற ரூ.10 ஆயிரம் லஞ்ச பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
» மேடையில் கோழியின் கழுத்தை அறுத்து, ரத்தம் குடித்த இசையமைப்பாளர்: போலீஸார் வழக்குப்பதிவு
» வளசரவாக்கத்தில் கொத்தடிமைகளாக வைத்திருந்த 5 பேர் மீட்பு: வீட்டு வேலைக்கு ஈடுபடுத்திய பெண் கைது
இவர் மூலம் தான் மாவட்ட வன பாதுகாவலர் அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள், மற்றும் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது லஞ்ச ஒழிப்புத் துறையினர் அங்கு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் முடிவில் இந்த லஞ்சப் பணம் தொடர்பாக யார் யாருக்குத் தொடர்பு உள்ளது என்பது தெரியவரும் என லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.