சிவகாசி அருகே கால்நடைத்துறை கட்டிடத்தில் தீ விபத்து: சதி வேலையா என விசாரணை

By அ.கோபால கிருஷ்ணன்

சிவகாசி: சிவகாசி அருகே அனுப்பங்குளத்தில் பயன்பாட்டில் இல்லாத கால்நடைத் துறைக்குச் சொந்தமான கோழிக்குஞ்சு பொரிக்கும் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் தீயில் கருகி சேதமடைந்தன.

சிவகாசி - சாத்தூர் சாலையில் அனுப்பங்குளம் கிராமத்தில் கால்நடைத்துறைக்குச் சொந்தமான மின்சாரம் மூலம் கோழி முட்டையில் இருந்து குஞ்சு பொரிக்கும் மையம் உள்ளது. இந்த மையம் கடந்த 20 ஆண்டுகளாக செயல்படாமல் பூட்டியே உள்ளது. இந்நிலையில் இன்று காலை இந்த கட்டிடத்தில் இருந்து புகை வந்ததால் பொதுமக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சிவகாசி தீயணைப்புத் துறையினர் அங்கு வந்து 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் கட்டிடத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான முட்டையில் இருந்து குஞ்சு பொரிக்கும் இயந்திரங்கள் (எலெக்ட்ரிக் இன்குபேட்டர்) தீயில் எரிந்து சேதமடைந்தன. பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்து மையத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் எப்படி தீ விபத்து ஏற்பட்டது என தெரியவில்லை.

இது சமூக விரோதிகளின் சதி வேலையாக இருக்குமோ என்ற கோணத்தில் சிவகாசி கிழக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE