ஆவடி: ஆவடி அருகே திருமுல்லைவாயலில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1.80 லட்சம் திருடப்பட்ட வழக்குத் தொடர்பாக, 16 திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டவரை போலீஸார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயல்- சிவா கார்டன், திருநகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (36). இவர், கடந்த ஏப்ரல் 23ம் தேதி காலை வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு போர்வெல் பணிக்கு சென்றார். பிறகு, அன்று மாலை பணி முடிந்து வீடு திரும்பினார் ரமேஷ். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டின் உள்ளே பீரோவில் வைத்திருந்த ரூ.1.80 லட்சம் மர்ம நபரால் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து, திருமுல்லைவாயல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ரமேஷ் வீட்டில் பணம் திருடிய நபரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், இன்று காலை திருமுல்லைவாயல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தேவதாஸ் மற்றும் போலீஸார், அயப்பாக்கம்- திருவேற்காடு சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் அவ்வழியே சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த இளைஞரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.
அவ்விசாரணையில் தெரியவந்ததாவது: "அந்த இளைஞர் செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே உள்ள முடிச்சூர்- லட்சுமி நகரை சேர்ந்த விக்னேஷ் என்கிற விக்கி (21) என்பதும், அவர் மீது ஏற்கனவே பள்ளிக்கரணை, சிட்லப்பாக்கம், ஆதம்பாக்கம், சேலையூர், கோடம்பாக்கம், மடிப்பாக்கம் மற்றும் குரோம்பேட்டை ஆகிய காவல் நிலையங்களின் எல்லை பகுதிகளில் 16 திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டு, சிறைக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், விக்னேஷ் கடந்த ஏப்ரல் 23ம் தேதி திருமுல்லைவாயல், சிவா கார்டன் பகுதியில் ரமேஷ் வீட்டின் பூட்டை உடைத்து, ரூ.1.80 லட்சம் திருடியுள்ளார். இவ்வாறு அந்த விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, விக்னேஷை போலீஸார் கைது செய்தனர்.