மதுரையில் தேவலாயத்தில் இரு தரப்பினருக்குள் மோதல்: 3 பேர் மீது வழக்கு

By என்.சன்னாசி

மதுரை: மதுரையில் தேவாலயத்தில் இரு தரப்பினருக்குள் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் கீழவாசல் பகுதியிலுள்ள சிஎஸ்ஐ கிறிஸ்துவ தேவாலயத்தில் நேற்று காலை சிறப்பு பிரார்த்தனை நடந்தது. போதகர் ராஜா ஸ்டாலின் தலைமையில் நடந்த இப்பிரார்த்தனை கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது, தேவால வரவு, செலவு கணக்கு விவரம் தொடர்பாக பழைய நிர்வாகத்தைச் சேர்ந்த சிலருக்கும், புதிய நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரையொருவர் மோதிக்கொண்டனர். தகவல் அறிந்த விளக்குத் தூண் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.

இதுதொடர்பாக போதகர் தரப்பைச் சேர்ந்த ஆபிரகாம் விளக்குத் தூண் போலீசில் கொடுத்த புகாரில் துரைசிங்கம் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. ஆபிகாம் தரப்பு மீது துரை சிங்கம், ராஜா செல்வம், ஜோசப் வாசுதேவன் ஆகியோரும் புகார் கொடுத்துள்ளனர். இதற்கு மனு ரசீது வழங்கிய நிலையில், போலீஸார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

போலீஸ் தரப்பில் கூறுகையில்,"சிஎஸ்ஐ தேவாலய நிர்வாகத்தை கவனிப்பது தொடர்பாக இரு தரப்பினருக்குள் எழுந்த பிரச்னையால் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. தற்போது, போதகரான ராஜா ஸ்டாலின் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த மோதல் நடந்திருப்பதாக தெரிகிறது. தொடர்ந்து விசாரிக்கிறோம்." என்று போலீஸார் கூறினர். தேவாலய மோதல் குறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைலரலானது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE