திருச்சி: திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே அந்தநல்லூர் காவிரிக் கரையில் வடக்கு தீர்த்தநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு எதிரேயுள்ள படித்துறையில், ராக்கெட் லாஞ்சரில் பயன்படுத்தப்படும் ஷெல் அக்.30-ம் தேதி கிடந்தது.
இதுகுறித்த தகவலின்பேரில் ஜீயபுரம் டிஎஸ்பி பாலச்சந்தர், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் அங்கு சென்று 60 செ.மீ. நீளம், 3.88 கிலோ எடை கொண்ட ஷெல்லை கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து, திருச்சி வெடிகுண்டு தடுப்பு செயலிழப்பு நிபுணர்கள் அதை ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், திருச்சி மாநகர வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு உதவி ஆய்வாளர் அருளானந்தம் தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவினர், நேற்று முன்தினம் இரவு அந்த ராக்கெட் லாஞ்சர் ஷெல்லை, கொள்ளிடம் ஆற்றில் 4 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டி, அதில் ஷெல்லை வைத்து, மற்றொரு வெடி பொருளை அதனுடன் சேர்த்து வைத்து வெடிக்கச் செய்து செயலிழக்கச் செய்தனர். ஷெல் வெடித்தபோது பல அடி உயரத்துக்கு கரும்புகை மேலெழும்பியது.
இதுகுறித்து போலீஸார் கூறியது: காவிரிக் கரையில் கிடைத்த ஷெல், பயிற்சிக்காகவும், சோதனைக்காகவும் பயன்படுத்தப்படும் டம்மியாக இருக்க வாய்ப்பு உள்ளது. இது வெடிப்பதால் பாதிப்பு நேரிடாது. இருப்பினும், வெடிக்க வைத்து செயலிழக்கச் செய்யப்பட்ட அந்த ஷெல்லில் இருந்கு மாதிரிகளை சேகரித்து சோதனைக்கு அனுப்பி உள்ளோம். சோதனை அறிக்கை வந்த பிறகே அது உண்மையானதா அல்லது டம்மியா என்பது தெரியவரும். இந்த ஷெல் இங்கு எப்படி வந்திருக்கும் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.
» சிவகங்கை அருகே பைனான்சியர் கொலையில் 5 பேர் சிக்கினர்
» சகோதரியுடன் பழகிய நண்பரை கூலிப்படையினருடன் சேர்ந்து கொலை செய்தவர் கைது