ஜம்மு காஷ்மீர்: அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
தெற்கு காஷ்மீர் மாவட்டத்தின் ஷாங்குஸ்-லார்னூ பகுதியில் உள்ள ஹல்கன் காலி அருகே இந்த என்கவுன்டர் சம்பவம் நடந்தது. கொல்லப்பட்ட இரண்டு பயங்கரவாதிகளில் ஒருவர் வெளிநாட்டவர், மற்றொருவர் உள்ளூரை சேர்ந்தவர் ஆவார். அவர்களின் தீவிரவாதக் குழுவின் இணைப்பு இன்னும் கண்டறியப்படவில்லை. தேடுதல் வேட்டை நடந்து வருகிறது என்றும், மேலும் விவரங்கள் பின்னர் தெரியவரும் என்றும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், ஸ்ரீநகரின் கன்யார் பகுதியில் மற்றொரு என்கவுன்டர் நடந்து வருகிறது. இதுவரை இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ‘ஸ்ரீநகர் மாவட்டத்தின் கன்யார் பகுதியில் தீவிரவாதிகளை சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டபோது துப்பாக்கிச் சண்டை வெடித்தது. காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்" என்று காஷ்மீர் மண்டல காவல்துறை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
அதேபோல ஜம்மு காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நேற்று என்கவுன்டர் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்திய ராணுவத்தின் சீனார் கார்ப்ஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ நவம்பர் 01, 2024 அன்று மாலை, பந்திபோராவின் ஜெனரல் ஏரியாவில், சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் குறித்த எச்சரிக்கை வெளியானது. அப்பகுதிக்கு பாதுகாப்பு படையினர் விரைந்த நிலையில், பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி காட்டுக்குள் தப்பிச் சென்றனர். தேடுதல் பணி நடந்து வருகிறது" என்று தெரிவித்துள்ளது.
» டெல்லி சென்ற ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: அச்சத்தில் உறைந்த பயணிகள்
» ஆறுகளில் மீன் பிடிக்க நான்கு மாதங்கள் தடை: இமாச்சல பிரதேச அரசு உத்தரவு