தேனி மாவட்டம் கூடலூரில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் உயிரிழப்பு

By KU BUREAU

கூடலூர்: தேனி மாவட்டம் கூடலூர் ஆசாரி தெருவை சேர்ந்த நண்பர்கள் லிங்கேஷ் (24), சேவாக் (23), சஞ்சய் (22), மோனிஷ்(22), கேசவன் (22). இவர்கள் 5 பேரும் வெளியூர்களில் தங்கி பணியாற்றினர்.

இந்நிலையில், தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த 5 பேரும் நேற்று முன்தினம் மாலை கம்பம்-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டனர். இதில் 3 பேர் ஒரு பைக்கிலும், மற்ற 2 பேர் ஒரு பைக்கிலும் சென்றனர். அதிவேகமாகச் செல்வது, திடீரென பிரேக் பிடிப்பது, முன் சக்கரத்தை தூக்கியபடி செல்வது உள்ளிட்ட சாகசங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, குமுளி தேசிய நெடுஞ்சாலையில், ஆதி சுஞ்சனகிரி மடத்தின் அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக 2 பைக்குகளும் நேருக்கு நேர் மோதின. இரண்டு வாகனங்களும் நொறுங்கின. இதில் லிங்கேஷ், சேவாக் ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்து கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட 3 பேரில், சஞ்சய் சிகிச்சை பலனின்றி உயிழந்தார். மோனிஷ், கேசவன் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கூடலூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE