சேலம்: சேலம் இரும்பாலை அருகே அதிக சப்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடித்தது தொடர்பாக, சிறுவர்களை இளைஞர் தட்டிக்கேட்டது, இரு தரப்பு மோதலாக மாறியது. இதில் 4 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறுவர்கள் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம் இரும்பாலை அருகே உள்ள பூசநாயக்கனூரைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவரின் அண்ணன் மகனான விஜய் என்பவர், தீபாவளி நாளான நேற்று பூசநாயக்கனூர் பள்ளி கூடம் அருகே சிறுவர்கள் சிலர் அதிக சப்தம் எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடித்தது குறித்து, அவர்களிடம் தட்டிக்கேட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சிறுவர்கள், விஜய்யிடம் வாக்குவாதம் செய்து அவரை மிரட்டியுள்ளனர். இதன் பின்னர் விஜய் அங்கிருந்து சென்றுவிட்டார்.
இதனிடையே, அச்சிறுவர்கள், விஜய் குறித்து தங்களது உறவினர்களிடம் புகார் தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று இரவு பூசநாயக்கனூருக்கு வந்த சிறுவர்களின் ஆதரவாளர்கள் 10-க்கும் மேற்பட்டோர், அங்கு விஜயை தேடியுள்ளனர். ஆனால், அவர் கிடைக்காததால் அவரது சித்தப்பா சதீஷ்குமாரின் வீட்டுக்குச் சென்று, அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளது. இதில் அச்சமடைந்த சதீஷ்குமாரும், அவரது மனைவியும் வீட்டுக்குள் சென்று கதவை தாழிட்டு கொண்டனர்.
இந்நிலையில், அங்கு வந்த சதீஷ்குமாரின் உறவினர்கள் சிலர், சிறுவர்களுடன் வந்த கும்பலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் இது இரு தரப்பினருக்கும் இடையிலான மோதலாக மாறியதாக கூறப்படுகிறது. இதில், சதீஷ்குமார், ஜெயக்குமார் வெங்கடாசலம், செல்வராஜ் உள்பட 4 பேர் காயமடைந்தனர்.
» விமானங்கள், அமைச்சர்களுக்கு 30 போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: நாக்பூர் நபர் அதிரடி கைது
» 2 குழந்தைகள் மர்ம மரணம்: நரபலி என்று குடும்பத்தினர் குற்றச்சாட்டு
இதனிடையே, சிறுவர்களும் அவரது ஆதரவாளர்களும் சதீஷ்குமாரின் வீட்டின் ஆஸ்பெஸ்டாஸ் கூரையை உடைத்து சேதப் படுத்தியுள்ளனர். இதனிடையே, சதீஷ்குமாரின் வீட்டு மேல் பகுதி சரிந்து விழுந்ததில், வீட்டினுள் இருந்த டிவி, கேமரா உள்ளிட்ட பொருட்கள் சேதமானது. இச்சம்பவத்தை அங்கிருந்த பெண்கள் சிலர் செல்போனில் பதிவு செய்தபோது, அவர்களை சிறுவர்களுடன் வந்த கும்பல் மிரட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் அக்கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இதனிடையே, மோதலில் காயமடைந்த 4 பேரும், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவத்தை அறிந்த சேலம் மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபினவ், தனிப்படை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டார். இரும்பு ஆலை போலீஸார் விசாரணை நடத்தி, தாக்குதலில் ஈடுபட்ட சிறுவர்கள் உள்பட 14 பேரை கைது செய்தனர். சம்பவத்தில் தொடர்புடைய விஜயை தேடி வருகின்றனர். மோதல் எதிரொலியாக, பூச நாயக்கனூர் பகுதியில் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.